நாட்டில் தொடரும் பலத்த மழையால் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – மத்திய, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாண மக்களுக்கு கடும் எச்சரிக்கை!



நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, நிலச்சரிவு அபாய வலயங்களில் மண்சரிவு ஏற்படும் கடும் அபாயம் எழுந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.கே. லக்சிறி இந்திரதிலக்க தெரிவித்தார்.

சீரற்ற வானிலை தொடர்பில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக மண்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாத்தளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்கனவே 1ஆம் நிலை மற்றும் 2ஆம் நிலை மண்சரிவு முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுப்புக்களின்படி, எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீட்டர் முதல் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில், மண்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால், மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது. எனவே, கடந்த கால இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு 'அதி-அபாயகரமான பகுதிகள்' என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் வாழும் மக்கள், அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், மலைநாட்டு வீதிகளில் மண்சரிவுகள், பாறைச் சரிவுகள் மற்றும் வீதிகள் உள்வாங்குதல் போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், அவ்வாறான பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் பாதசாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.