
அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் முறையற்ற முடிவுகள் காரணமாகவே நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இவற்றினால் சாதாரண மக்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி விசனம் வெளியிட்டார்.
இன்று புதன்கிழமை (21) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நுரைச்சோலை மின் நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரிக் கொள்வனவு செய்யப்பட்டமையே மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமாகும். இந்த நிலக்கரி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து உடனடியாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், பாண் மா, சீனி, அரிசி, தேங்காய் மற்றும் தேயிலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. வரிகளால் மக்கள் ஒடுக்கப்பட்டு, தொழில்துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் அபிவிருத்தி குறித்துப் பெருமை பேசினாலும், கிராமப்புறங்களில் தெரு விளக்குகளைப் பராமரிக்கவோ அல்லது வீதிகளிலுள்ள குழிகளை மூடுவதற்கோ கூட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வார்த்தைகளால் அபிவிருத்தி செய்ய முடியாது பிரயோசனமான செயல்பாடுகளே தேவை.
காவன்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு அரசாங்கமும் வனஜீவராசிகள் திணைக்களமுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
சிங்கள பௌத்த நாடான இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதோடு, நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். பௌத்த மதத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.












