சிறுவர் வைத்தியசாலைக்கான ஒரு கோடி ரூபாய் ‘சிரிலிய சவிய’ கணக்கிற்கு மாற்றப்பட்டதாக ஷிரந்தி மீது குற்றச்சாட்டு!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியும் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்‌ஷவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் புதிய தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபா, சிரிலிய சவிய கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (13 ) செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக ‘கார்ல்டன் சுவ உதான’ என்ற திட்டத்தின் கீழ் நிதி சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தேசிய சேமிப்பு வங்கி, செலான் வங்கி மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் நிதியுதவி கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த வைத்திய உபகரணத்தைக் கொள்வனவு செய்வதற்கு 140 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தத் தொகை வாய்மொழியாக 50 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல் பெண்மணியின் கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபை 10 மில்லியன் ரூபா நிதியுதவிக்கு அனுமதி வழங்கியதாக அரச தரப்பு குறிப்பிட்டது.

எனினும், அந்தப் பணம் கார்ல்டன் சுவ உதான திட்டத்திற்குச் சொந்தமான கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாறாக, மருதானை சுதுவெல்ல பகுதியில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் பேணப்பட்ட சிரிலிய சவிய கணக்கிற்கு அந்த நிதி மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இறுதியில் வழங்கப்பட்ட சி.ரி. ஸ்கேனரின் உண்மையான தகவலைப் பற்றியும் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, குறித்த மருத்துவ உபகரணத்தை சீன அரசாங்கமே வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தது.

எனினும், பின்னர் ஷிரந்தி ராஜபக்‌ஷ அந்த ஸ்கேனரைத் தமது அமைப்பினால் வழங்கப்பட்டதாகத் தோன்றும் வகையில் வைத்தியசாலைக்கு வழங்கியதாக விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவரது மகன்களில் ஒருவரின் பிறந்தநாளன்று இந்த உபகரணம் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பணியாற்றிய இரண்டு மருத்துவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்தது. சிரிலிய சவிய அமைப்பிடம் இருந்து சி.ரி. ஸ்கேனர் ஒன்றை வைத்தியசாலை ஒருபோதும் கோரவில்லை என இரு வைத்தியர்களும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சிரிலிய சவிய அமைப்பு அரச சார்பற்ற நிறுவனமாக உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை என்றும், தேவையான நிதி அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நன்கொடைகளைப் பெறுவதற்காக அனுப்பப்பட்ட கடிதங்களில் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களும் அமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களிடம் நிதி கோரும் போது, ஓர் அரச சார்பற்ற அமைப்பு ஏன் ஜனாதிபதி செயலகத்தின் தொடர்பு விபரங்களையும் அரச இலச்சினையையும் பயன்படுத்த வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கேள்வி எழுப்பினார். அரச நிறுவனங்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக சந்தேகநபர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதைக் காரணம் காட்டி, ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.

இதனை அடுத்து, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, முன்னாள் முதல் பெண்மணியை ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்