
இந்நாட்களில் இன்புளுவென்ஸா காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நோய்த்தொற்றுக்குக் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன தெரிவிக்கையில்,
இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றானது காற்றின் மூலம், தொடுகையின் மூலம் மிக எளிதாக பரவக் கூடியது. இந்நிலையில் கடந்த 3 - 4 வாரங்களாக நாட்டில் பல பகுதிகளிலும் இன்புளுவென்ஸா நோய்த் தொற்று அதிகமாக பரவிவருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 20 வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட நோயாளர்களின் மாதிரிகளைக் கொண்டு பரிசோதித்தபோது சமூகத்தில் இன்புளுவென்ஸா ஏ வைரஸ் பரவல் 33 சதவீதமாக அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வருடமுழுவதும் நாட்டில் இன்புளுவென்ஸா அவ்வப்போது பரவிவருகிறது. பருவகாலங்களின் போது சமூகத்தில் இத்தோற்று வேகமாக பரவிவருகிறது.
அந்தவகையில் மே மற்றும் நவம்பர் மாங்களில் வைரஸ் பரவல் சடுதியாக அதிகரிக்கின்றன. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவரிடம் காய்ச்சல், தடிமன், இருமல், உடல் வலி மற்றும் தொண்டை கரடு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக் கூடும். நோயாளி உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதன் மூலமும் 3-4 நாட்களில் நோய் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது.
எனினும் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோர் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.
உரிய சிகிச்சைகளைப் பெற தாமதமாகும் பட்சத்தில் சிக்கலான பக்கவிளைவுகள் அல்லது ஏனைய நோய்நிலைமைகள் தீவிரமடையக் கூடும். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் நீடிக்குமாயின் 24 மணித்தியாளங்களுக்குள் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது அவசியம்.
அத்தோடு நோய்த்தொற்றுக்கு ஆளான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதாலும், பெரியவர்கள் தொழில்களுக்குச் செல்வதாலும் ஏனையோருக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் அவ்வாறானோர் ஓய்வெடுப்பதும், போதியளவான நீர் அருந்துவதோடு, பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்ப்பதும் நல்லது என்றார்.








.jpeg)
.jpg)


