வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி என்ற பெயரில் இணைய மோசடி – இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த பெற்றோர்கள், மாணவர்கள்; CERT எச்சரிக்கை!


சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களுக்கு ஏமாறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்த பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களுக்கு ஏமாறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்த பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதன் மூலம் வெளிநாடுகளுக்கான விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், பல ஆண்டுகளுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தைப் பெற்று, பின்னர் குடியுரிமையைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கும் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் காணக்கூடும்.

இவற்றில் சில விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவையாகும். அவ்வாறான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும்போது, உங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் தோன்றக்கூடும்.

மோசடியாளர்கள் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பதிவு கட்டணம் மற்றும் முதல் கல்வித் தவணைக்கான கட்டணத்தை மட்டும் செலுத்துவதன் மூலம் பல்கலைக்கழகத்தில் சேர முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் மாணவர் ஒருவர் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொண்டு தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகளைச் சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன், அடுத்தடுத்த கல்வித் தவணைகளுக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கக்கூடும்.

மோசடியாளர்கள் மின்னஞ்சல் கணக்கொன்றை உருவாக்குமாறும் அல்லது WhatsApp குழுவொன்றில் இணைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தக்கூடும். இந்த வழிகளின் மூலம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் பகிரப்படலாம். இந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்திலிருந்து திருடப்பட்டவை அல்லது நகல் எடுக்கப்பட்டவை என்பதை சந்தேகிக்க முடியாத அளவிற்கு மோசடியாளர்கள் மிகவும் தந்திரமாகவும் நம்பத்தகுந்த வகையிலும் தகவல்களை வழங்குகின்றனர்.

பதிவு செய்வதற்காக வழங்கப்படும் ஆவணங்களும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் உண்மையான ஆவணங்களைப் போன்றே காணப்படலாம். பின்னர், பணம் செலுத்துவதற்காக வெளிநாட்டு வங்கிக் கணக்கு விபரங்களையும் அவர்கள் வழங்கக்கூடும். இதன் மூலம் சந்தேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.

இதுபோன்ற மோசடிகளுக்கு ஏமாறி, பதிவு கட்டணம் மற்றும் ஆரம்ப கல்விக் காலத்திற்கான கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாயை செலுத்திய பின்னர், இந்த மோசடியாளர்கள் காணாமல் போய்விடுகின்றனர்.

எனவே, இணையத்தில் வெளியிடப்படும் இதுபோன்ற விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும், சட்டபூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் சேவைகளை வழங்கும் பல்கலைக்கழக பிரதிநிதிகளை மட்டுமே தெரிவுசெய்யுமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், இவ்வாறான நபர்களால் வழங்கப்படும் அனைத்து ஆவணங்களின் உண்மைத்தன்மையையும், பணம் செலுத்துமாறு கோரப்படும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர் கவனமாகச் சரிபார்க்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.