திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெற்றிக் தொன் சோளம் 10 மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!



திரிபோஷ உற்பத்திக்காகக் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெற்றிக் தொன் சோளத் தொகுதி இன்னமும் துறைமுகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பாராளுமன்றப் பொது முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அம்பலமாகியுள்ளது.

திரிபோஷ நிறுவனம் கோப் குழுவின் உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த சோளத் தொகுதியைத் துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான வசதிகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வழங்கத் தவறியமையே இந்த நீண்டகாலத் தாமதத்திற்குக் காரணம் என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.