திருக்கோவிலில் டெங்கு அபாயம் ; 20 வீடுகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

(ஜே.கே.யதுர்ஷன்)


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (24) கிழக்கு மாகாண சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இதன்போது மாகாண சுகாதாரப் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதாரத் துறை உயரதிகாரிகள், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சுமார் 20 வீடுகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பரிசோதிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு திருக்கோவில் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றது.

மேலும், இன்று (25) முதல் திருக்கோவில் பிரதேசம் முழுவதும் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணுவதுடன், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையினரின் பொறுப்பு மட்டுமன்றி, ஒவ்வொரு பொதுமகனதும் சமூகப் பொறுப்பாகும் எனவும் தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.