கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து: 23 வயது இளைஞர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!



கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் சாரதி கவனக்குறைவாகக் கதவைத் திறந்த போது, பின்னால் வந்த சைக்கிள் அந்தக் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளது.

இதன்போது, கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று வீதியில் வீழ்ந்தவர்கள் மீது மோதியதில், சைக்கிளை செலுத்திச் சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் உடனடியாகக் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கல்முனைப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.