அதிபர் சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன் 31 வருட காலக் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்

(சித்தா)

திருக்கோவில் கல்வி வலயத்தின் தம்பிலுவில் கனகரெத்தினம் வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன் 31 வருட காலக் கல்விப் பணியில் இருந்து இன்று (27.11.2026) ஓய்வு பெறுகின்றார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பினைச் சேர்ந்த சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன் 1993 ஆம் வருடம் தேசிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் மட்டக்களப்பு டெலிக் ஆங்கில வாண்மை விருத்தி நிலையத்தில் இணைந்து ஆங்கிலத்தில் வாண்மை விருத்தியினைப் பெற்றிருந்தார். தொடர்ந்து மட்டக்களப்பு பிரிண்செற் பயிற்சி நெறியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராக தனது தொழிலுக்கு புடம் போட்டுக்கொண்டார்.

அத்துடன் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப்பிரிவில் பயின்று கலைப்பட்டதாரியாக தனது கல்வித் தகைமையை உயர்திக் கொண்டார். அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டமேல் டிப்ளோமா பாடநெறியிலும் சிறப்புத் தேர்ச்சியடைந்தார். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் பெருந்தொகை மாணவர்களை ஆங்கில பாடத்தில் சிறப்புத் தேர்ச்சியடைய வைத்தார்.

இவரின் கற்றல் - கற்பித்தல் திறமையைக் கண்டறிந்த தற்போதைய வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய வை.ஜெயச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருக்கோவில் கல்வி வலயத்தின் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொடர்பும் ஆங்கில, சிங்கள மொழிகளிலான ஆளுமை காரணமாகவும் தனது கல்விப் பணியினை மிகவும் திறம்பட மேற்கொண்டார்.

சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன் அவர்களின் நீண்ட சேவையின் பின்னர் தம்பிலுவில் கனகரெத்தினம் வித்தியாலயத்திற்கு அதிபராக கடமையாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்தது. ஆசிரியர்கள், பெற்றோர்களுடனான வினைத்திறன் மிக்க தொடர்பு இப் பாடசாலையில் சிறந்த விளைதிறனை ஏற்படுத்தியது. வெளி மாவட்ட பாடசாலைகளிலுருந்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு வந்து தரிசித்துச் செல்லும் அளவிற்கு பாடசாலை பிரபல்யம் பெற்றது.

பாடசாலையின் கல்வித் தரத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தார். அத்துடன் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நற்சிந்தனை, காலைக் கூட்டம், மாணவர் மன்றம் போன்றவற்றினூடாக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து காட்டினார். இதன் மூலம் கல்விப் பணியில் காலத்தால் அழியாத சேவை செய்து மக்களின் மனதைத் தொட்ட ஒரு அதிபராக ஓய்வு பெறுகின்றார் அதிபர் சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன்.