இலங்கை – இந்திய மீனவர் விவகாரம்: ஜனவரி 2ஆம் திகதி தமிழகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!



இலங்கை, இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும், தமிழக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி தமிழகத்தில் இடம்பெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வீரகேசரியிடம் தெரிவித்தார்.

அத்துடன், தமிழக முதல்வர் ஜோசப் சி.விஜய் தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டுவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்ற நேர்மறையான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இந்திய, இலங்கை மீனவர்கள் விவகாரம் சம்பந்தமாக நிரந்தமரமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதற்காக பல்வேறு மட்டத்திலான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளதோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஓரங்கமாக, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் தமிழ் நாட்டுக்குச் செல்லவுள்ளதோடு அங்கு தமிழக அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தல், இழுவைமடி வலைப் படகுகளைப் பயன்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக தீர்வொன்றை எட்டும் நோக்குடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் ஜோசப்.சி.விஜய் தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல்வேறு விடயங்களில் புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இருநாட்டு மீனவர்கள் விடயத்திலும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசாங்கம் நிரந்தரமான தீர்வொன்றை பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்ற நேர்மறையான நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.