ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.3,000 கோடி அறவிடப்பட வேண்டும்!



உடன்டிக்கைகளையும் ஒபந்தங்களையும் மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து சுமார் 30 பில்லியன் ரூபா வரை அறவிடப்பட வேண்டியுள்ளதாக அரசபொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளிப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்புடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விசேட கவனம் செலுத்துமாறும், நிலுவையில் உள்ள தொகையை அறவிடுவதற்குப் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குறித்த குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் குழுவின் ஆய்வுகளின்போது 2024 தேர்தல்களில் போட்டியிடுவதற்காக இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சேவையில் இணைந்து கொண்ட பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு 3,633,900 ரூபா வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இத்தொகையை அவரிடமிருந்து மீளப் பெறுமாறு அதிகாரிகளுக்கு அக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இதற்கிடையில், சில பல்கலைக்கழக அதிகாரிகளின் கல்வித் தகுதிகள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. அத்துடன் 38 கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகங்களின் வருகைப்பதிவுக்கான இலத்திரனியல் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளதுடன், சில ஊழியர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுப்பு வரம்பை மீறி விடுப்பு எடுத்துள்ளனர்.

சிலர் மேலதிகமாக ஐந்து நாட்கள் விடுப்பு எடுத்ததுடன், வேறு சில ஊழியர்கள் 5 முதல் 83.5 நாட்கள் வரை தங்களது விடுப்பு வரம்பை மீறியுள்ளனர். இதன் விளைவாக, இந்த ஊழியர்களுக்கு மேலதிகமாக 99,181,457 ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன், அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடும் ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இருப்பினும், அவ்வாறான கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.

அவ்வப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் மற்றும் 2004 சுனாமி பேரழிவு ஆகியவற்றுக்கே ஆவணங்கள் இழந்தமைக்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்தக் விளக்கங்களை நிராகரித்ததுடன், சம்பந்தப்பட்ட தகவல்களுக்கான துல்லியமான பதிவுகளை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.