பொலிஸ் காவலில் இருந்த 36 வயது சந்தேகநபர் உயிரிழப்பு!



மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இன்று சனிக்கிழமை (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மாத்தளை பொலிஸ் நிலையத்தின் முதலாவது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேகநபருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி - அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (19) மாத்தளை ஹித்கொல்ல பிரதேசத்தில் 3,010 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மாத்தளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்த சந்தேகநபர் போதைப்பொருளுக்குத் தீவிரமாக அடிமையானவர் எனவும், கண்டி, கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராகப் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.