
மஸ்கெலியா புனித சூசையப்பர் தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த குறைந்தது 36 மாணவர்கள், இன்று (20) திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் 96 மாணவர்கள் இன்று காலை 8.45 மணியளவில் காலை உணவை உட்கொண்டதன் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவு உட்கொண்ட பின்னர் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்த வேளையில், அவர்களில் சுமார் 36 பேருக்குத் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உடனடியாகச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவர்களும் மூன்று மாணவிகளும் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்களுக்குத் திடீரென ஏற்பட்ட இந்தச் சுவாசக் கோளாறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.












