கடற்கரையில் கைவிடப்பட்ட 450 கிலோ பீடி இலைகள் கைப்பற்றல்!



கடல் மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 450 கிலோ கிராம் பீடி இலைகள், சிலாபம் கடற்கரையோரப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (24) செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

சிலாபம் கரையோர பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை 5.00 மணியளவில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 'CG 105' ரோந்துப் படகின் குழுவினரும், தொடுவாவ கடற்படைப் பிரிவினரும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையின் போது கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த 15 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொதியும் சுமார் 30 கிலோகிராம் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்தமாகச் சுமார் 450 கிலோகிராம் பீடி இலைகள் அவற்றிலிருந்ததாக தெரியவந்துள்ளது.

கரையோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததை அவதானித்த கடத்தல்காரர்கள், இந்த பீடி இலைத் தொகுதியைக் கடற்கரையில் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.