
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தமைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 2027 மார்ச் 05 ஆம் திகதி ஆதாரங்களுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த எழுத்தாணை (Writ) மனுவை கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்திருந்தது. அதனை ஆட்சேபித்து அவர் உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார்.




.jpg)







