பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பண்டைய மன்னர்களால் சங்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட அநுராதபுரம் புனிதப் பிரதேசம் இன்றைய தேரர்களுக்கும் உரிமையானதாகும்.
அங்கு தேரர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. அவ்வாறான நிலப்பரப்புக்குள் தேரர்களின் அனுமதியின்றி மன்னராயினும் ஜனாதிபதியாயினும் நுழைய முடியாது. இது நாட்டின் பாரம்பரியமும் வரலாற்று ரீதியான சட்டமுமாகும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரையும் பௌத்த மரபுரிமையைப் பாதுகாக்கின்றது.
ஆனால், அந்த மரபுரிமையை மதிக்காத அரசாங்கம் பொலிஸாரைப் பயன்படுத்தி அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் நடத்தியதைப் பார்த்தோம்.
நீதவான் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் முயற்சிக்கப்பட்டது. தமக்குரிய இடத்தில் அமைதியாக கருத்தை வெளிப்படுத்துவது பிக்குகளுக்கு மட்டுமன்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமையாகும்.
அமைதியாக இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தை மோதலாக மாற்றியவர்கள் தொடர்பான காணொளிக் காட்சிகள் உள்ளன. ஜஸ் கிறீம் விற்பனையாளர் ஒருவரும் நீல நிற சட்டை அணிந்திருந்த ஒருவரும் மோதலைத் தொடங்கியதாக ஊடகங்களில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
எனினும், பொலிஸார் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையே கைது செய்துள்ளனர். மோதலைத் தொடங்கியவர்கள் தொடர்பில் காணொளிச் சான்றுகள் இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது அரசியல் தலையீடு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அநுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பௌத்தர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களையும் எதிர்ப்பையும் பொலிஸ் அடக்குமுறையால் தணிக்க முடியாது. பௌத்தர்களின் இதயமாக விளங்கும் தேரவாத பௌத்தத்தின் முக்கிய மையமான அநுராதபுரம் மீது கைவைக்க அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது. அபிவிருத்திக்காக வேறு இடங்களில் நிதி தேவைப்பட்டால், தம்புத்தேகம வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
அநுராதபுரத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்பு முதலில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தொல்லியல் பெறுமதிகளைப் பாதுகாத்து, மூன்றாவது கட்டத்திலேயே அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். பௌத்தத்தை மதிக்கும் தலைமைத்துவம் நாட்டில் உருவாகும் வரை புனிதப் பிரதேசத்தை தற்போதுள்ள நிலையிலேயே வைத்திருப்பதே சிறந்தது. அந்த வழிமுறையே முறையானது.
ருவான்வெலிசாயவின் அடியில் அகழ்ந்து அதனைச் சரியச் செய்யும் சதித்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தாம் கூறியதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், மத விவகார அமைச்சரும், இளைஞர் விவகார பிரதி அமைச்சரும் கூறுவது பொய்யானது. அவ்வாறான கருத்தைத் தெரிவித்த காணொளியை வெளியிடுமாறு அவர்களுக்கு மீண்டும் சவால் விடுக்கின்றேன். எரங்க குணசேகர பிரதி அமைச்சருக்கும் இதே சவாலை விடுத்துள்ளேன்.
எனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் அழைப்புக்காகக் காத்திருக்கின்றேன். அழைப்பு கிடைத்ததும் அநுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துவேன் என்றார்.












.jpg)
