இன்றைய வானிலை



பலமிக்க "அக்வான்" சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென் மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக காணப்படுகின்றது. இது கடந்த இரவு சுமார் 11.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக சுமார் 740 km தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இந்த சூறாவளியானது வடக்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் நாளை காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் வட கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையினால் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்கும் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

இதேவேளை ஏற்கெனவே இக் கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.



கடல் பிராந்தியங்களில்

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் வட திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.