மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஒருநாள் சேவைகளுக்கு முன்பதிவு கட்டாயம்!


பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சேவைபெறுநர்கள், முன்பதிவு (Prior Appointment) செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனங்களைப் புதிதாகப் பதிவுசெய்தல், வாகன உரிமையை மாற்றம் செய்தல், சாரதி அனுமதிப்பத்திரச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்பதிவுகளை மேற்கொள்வதற்காக மாவட்ட ரீதியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

கொழும்பு: 011-2117116

கம்பஹா: 033-2117116

குருநாகல்: 037-2117116

ஹம்பாந்தோட்டை: 047-2117116

அனுராதபுரம்: 025-2117116

யாழ்ப்பாணம்: 021-2117116

குறித்த அலுவலகங்கள் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்காக, புதிய பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், dmtappointments.dmt.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, திணைக்களத்தின் சாதாரண சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்குவது (முன்பதிவு) அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வாகன உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களை நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான அலுவலகத்துக்கு மேலதிகமாக, மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.