இலங்கை – கனடா கல்வி மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!



இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் தலைமையிலான குழுவினர், நேற்று வியாழக்கிழமை (19) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

உயர்ஸ்தானிகரையும் அவரது குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதன் ஊடாக இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த முடியும் என கனேடிய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கனேடியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பங்காண்மையை உருவாக்குவதன் மூலம் உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், திறன் அபிவிருத்தி மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்களில் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

கல்வி வாய்ப்புகள் மற்றும் நிறுவன ரீதியான பங்காண்மைகளை மேம்படுத்துவதன் ஊடாக விஞ்ஞானக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை விருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதில் கனடாவில் வாழும் இலங்கையர் சமூகம் ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய துறைகளில் விசேட கவனம் செலுத்தி, கனேடிய முதலீடுகளை அதிகளவில் நாட்டுக்கு ஈர்ப்பதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.

இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் க்வென் டெம்மல் (Gwen Temmel), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.