
மாற்றுத்திறனாளிப் பாடசாலை மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு பிள்ளையும் தமது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து மற்றும் போஷாக்குத் திட்டம்: பாடசாலை மீளமைப்பு நடவடிக்கைகளின் கீழ் பாடசாலைகளை ஒன்றிணைக்கும்போது போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயமாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்விதத் தடையுமில்லை.
மேலும், சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட போஷாக்குத் திட்டத்தின் பின்னர் மாணவர்களின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை இதன்போது அவதானிக்கப்பட்டது.
தமிழ் மொழி மூலக் கல்வி: கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் குறைவாக இருப்பதால் மாணவர்களின் வருகை குறைவதுடன் இடைவிலகல்களும் ஏற்படுகின்றன.
இதற்குத் தீர்வாக, இப்பிரச்சினை நிலவும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகளை ஆரம்பிக்கவும், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலையொன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை வளங்களைப் பாதுகாக்க மாகாண சபையின் அனுமதியுடன், பாடசாலை மட்டத்திலோ அல்லது பிரதேச ரீதியிலோ பாதுகாவலர்களை ஆட்சேர்க்கும் பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இதற்காகத் தினசரிக் கொடுப்பனவு முறை அல்லது வரவு செலவுத் திட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்தும், வெளித்தரப்புச் சேவைகளைப் பெறும்போது பொருத்தமான அளவுகோல்களைப் பின்பற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்கள் இன்றிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான ஆவணங்களைத் தயாரிப்பதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க, பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளை நடத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் அதிபர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவிய கொள்கை வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கைக்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய அடுத்த வருடம் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வசதிகள் குறைந்த பாடசாலைகளை வழிநடத்துவதில் அதிபர்களின் அர்ப்பணிப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் செயன்முறைப் பயிற்சிகளுடன் மேலதிகப் பயிற்சித் தொகுதிகளை வழங்குவது குறித்தும், அடுத்த வருடப் பயிற்சித் திட்டங்களில் 'மாணவர் மையக் கல்வி' முறையின் உண்மையான நோக்கத்தைச் செயற்படுத்துவது குறித்தும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, கொழும்பு மேலதிக மாவட்டச் செயலாளர் காஞ்சனா குணவர்தன மற்றும் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





.jpg)






