.jpg)
நாட்டின் சட்ட வைத்திய சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், அதன் மனித மற்றும் பௌதீக வளங்களை வலுப்படுத்தி தொழில்நுட்ப மற்றும் நிர்வாக செயற்பாடுகளை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கும் விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சில் வியாழக்கிழமை (19) பிற்பகல் இலங்கை சட்ட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட வைத்திய துறையில் நிலவும் பிரச்சினைகளை முறையாக அடையாளம் கண்டு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளைப் பேணும் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் டிஜிட்டல்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தகவல்களை முறையாக நிர்வகிக்கவும், அறிக்கைகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.
மேலும், நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 55 சட்ட வைத்திய அதிகாரி காரியாலயங்களில் நிலவும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதோடு, நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகளும் காலத்திற்கு ஏற்ப இற்றைப்படுத்தப்படும்.
வெளிநாடுகளில் உயிரிழந்து நாட்டுக்குக் கொண்டுவரப்படும் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகளின் போது எழும் சிக்கல்களைத் தீர்க்கவும் தெளிவான வழிமுறைகள் வகுக்கப்படும். ஆதார வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட திட்டத்தின் ஊடாக சட்ட வைத்திய பிரிவுகளுக்குத் தேவையான வசதிகள் துரிதமாக வழங்கப்படும்.
மரண மற்றும் குற்றவியல் விசாரணைகளில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களை வழங்கி நீதியை வழங்குவதுக்கு நேரடியாகப் பங்களிக்கும் இந்த முக்கிய தேசிய சேவையை மேம்படுத்துவதற்கு, இலங்கை சட்ட வைத்திய நிபுணர்கள் கல்லூரி தயாரித்து வழங்கும் நடைமுறைச் சாத்தியமான அபிவிருத்தி யோசனைகளின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.












