மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டுமா? – சஜித் கேள்வி



திறைசேரியில் பணம் நிரம்பி வழிகிறது எனக்கூறும் அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவுசெலவுத் திட்டம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் 220 இலட்சம் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வு, ஸ்தம்பித்துள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராகச் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுத்தல் என்ற போர்வையில் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்கிறது. அத்துடன், நாட்டின் மகா சங்கத்தினரையும் காவி உடையையும் பாதுகாப்புப் படையினர் இழிவுபடுத்தும் நிலையை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இன்று வறுமை அதிகரித்துள்ளதோடு, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இலவச சுகாதார சேவை பெற வேண்டிய 220 இலட்சம் மக்களும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நபர் மாதம் ஒன்றிற்கு வாழ்வதற்கு 17,000 - 18,000 ரூபா போதுமானது எனக் கூறுவது எந்தவித அறிவியல் பூர்வமான தரவுகளும் அற்ற கூற்றாகும். அரசாங்கத்துக்கு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை.

அன்று தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த ஜே.வி.பி யினர், இன்று மக்களிடம் இலஞ்சம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதி யார் எனத் தீர்மானிக்கும் உரிமையை நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பது சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு வழிவகுக்கும் என சர்வதேச அமைப்புகளும் எச்சரித்துள்ளன. மக்களை இந்தத் துன்புறுத்தல்களில் இருந்து மீட்க மாற்று அரசாங்கம் என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.