ரம்பேவ பேருந்து விபத்து – முழுமையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!



ரம்பேவயில் இடம்பெற்ற கோர வீதி விபத்து தொடர்பாக முறைமையான விசாரணையை நடத்தி, அதன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க, மிகிந்தலை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக்கொடிய விபத்து தொடர்பில் மிகிந்தலை பொலிஸார் பி-அறிக்கை (B-report) மூலம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மேலதிக நீதவான் ரம்பேவ பகுதியில் விபத்து நடந்த இடம் மற்றும் விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகளையும் நேரில் சென்று பார்வையிட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

அவற்றை பார்வையிட்ட பின்னர் மேலதிக நீதவான், மிகிந்தலை பொலிஸாருக்கு மேலும் உத்தரவிடுகையில், விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகள் தொடர்பாகவும் மோட்டார் வாகன பரிசோதகர் மூலம் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி உரிய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

அதன்பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற மேலதிக நீதவான், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பார்வையிட்டதுடன், சடலங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை நடத்தி உரிய பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் உத்தரவிட்டுள்ளார்

பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏ-9 வீதியின் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் 71 பேர் காயமடைந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பேருந்துகளும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி நேற்று (10) இடம்பெற்ற இந்த விபத்து, ஒரு பேருந்தின் சாரதியின் ஆபத்தான மற்றும் கவனயீனமான வாகனம் செலுத்தல் காரணமாகவே இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோதே, எதிரே வந்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.