இலங்கை – தாய்லாந்து இடையே வீசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது!



இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான வீசா விலக்கு ஒப்பந்தம், தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் தாய்லாந்து பிரதிப் பிரதமர் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.

அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் சுற்றுலா, விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெறவுள்ள பௌத்த கலாசார நிகழ்வொன்றுக்கும் தலைமை தாங்கவுள்ளார். இலங்கையில் உள்ள 'பிரது பா' மற்றும் ' ஸ்ரீநரோங்' ஆகிய இரண்டு தாய்லாந்து யானைகளின் நலன் மற்றும் பராமரிப்பு குறித்து நேரில் சென்று பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.