அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சி ! – சாகர காரியவசம்


நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்து வளமான நாட்டை உருவாக்குவதாகக் கூறி வந்த தற்போதைய அரசாங்கத்துக்கு, இதுவரை இருந்த ஆட்சியாளர்களின் பணிகளில் துளியளவுகூடச் செய்வதற்குத் திறமையில்லை. இதன் காரணமாக அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக அதிகாரத்தைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (09) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயர் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளுக்கான பல வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமலுள்ளன. கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமக்கு தேவையான முறையில் தீர்ப்புகளை வழங்குமாறு அரசாங்கம் மறைமுக அழுத்தம் பிரயோகிக்கிறது.

கம்பஹா மற்றும் கல்கிசை நீதவான்களின் திடீர் இடமாற்றங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

ஞானசார தேரரின் விவகாரம் மற்றும் மகா சங்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான தாக்குதல்கள் மூலம் இந்த அரசாங்கம் பௌத்த சாசனத்துக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது. சங்கப் பேதத்தை உருவாக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை, புத்திஜீவிகள் மற்றும் மதத் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், இந்த அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் அவற்றுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.