
கெபித்திகொல்லாவையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யானைத் தந்தத் துண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பல்வேறு பொறிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காட்டு யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'ஹஸ்தி சேனா' வனவிலங்கு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஜபாகு யானை நடமாடும் யான் ஓயா – வஹல்கட பகுதியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வனப்பகுதிகள் மற்றும் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது மூன்று யானைத் தந்தத் துண்டுகள், முன்னால் வெடிமருந்து நிரப்பிச் சுடும் துப்பாக்கி பல தோட்டாக்கள் மற்றும் வனவிலங்குகளின் இறைச்சி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் உலோகக் கம்பிகள், வனப்பகுதிகளில் , தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வேட்டைப் பொறிகள், கூர்மையான கத்திகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளைப் பாதுகாத்தல், வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைத்தல், மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மனித உயிர்கள், உடைமைகளைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் தேசிய ரீதியில் 'ஹஸ்தி சேனா' திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் சட்டவிரோத வேட்டையாடல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












