
தமிழ் மக்கள் தமது தேசியத் தலைவராக போற்றும் பிரபாகரனின் பெயரை பாராளுமன்றத்தில் குறிப்பிடுவதற்கு தடை விதிக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவீர்கள்? இனப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்?, பிரபாகரனின் பெயருக்கே அந்தளவுக்கு அச்சமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவராக போற்றும் பிரபாகரனின்பிறந்தநாள். இன்று .அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட 'பிரபாகரனுக்கு இந்த பாராளுமன்றத்தின் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பதை ஏற்க முடியாது.இது குறித்து பாராளுமன்ற செயலாளர் சபை உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்' என்றார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதான் இந்த நாட்டின் நிலைமை. தமிழ் இனத்தை எந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள் என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.இனவாதம் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால் பிரபாகரன் என்ற பெயரை குறிப்பிட்டது தான் தற்போது உங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இதுதான் இனவாதம். இனவாதமாக செயற்படுகின்றீர்கள்.இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் எவ்வாறு இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும்?, நாடு முன்னேற்றமடையும்? இந்த நாட்டில் மூவினம் வாழுகின்ற நிலையில் பிரபாகரனின் பெயருக்கு இந்த சபை எந்தளவுக்கு அச்சமடைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது' என்றார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட ' பாராளுமன்ற உறுப்பினர் துரைசாரா ரவிகரன் தனது உரையில் பிரபாகரன் மற்றும் ஈழம் என்ற சொற்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.இவ்விரு சொற்களையும் ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பாராளுமன்ற செயலாளர் சபையிடம் வலியுறுத்துகிறேன்' என்று மீண்டும் குறிப்பிட்டார்.








.jpg)



