கொழும்பில் வெள்ளப்பெருக்குக்கு முறையற்ற கட்டுமானங்களும் கழிவுகளுமே காரணம் – அமைச்சர் நளிந்த!



கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் நீரினால் மூழ்கியது குறித்து இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்தார்

இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் நீர்வடிகால் அமைப்புகள் மற்றும் கால்வாய்களின் மொத்த நீளம் 469 கிலோமீற்றர்கள் ஆகும் என்றார்.

2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மூலம், அதில் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே மணித்தியாலத்திற்கு 102 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியைத் தாங்கி நீரை வெளியேற்றும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இவ்வாறு நீர் தேங்கியமைக்கும், கொழும்பு நகரின் பல பகுதிகள் நீரினால் மூழ்கியமைக்கும் முறையற்ற கட்டுமானங்களும், அனுமதியற்ற வதிவிடங்களும், அதேபோல முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றுவதுமே காரணமாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, இந்தப் பணிகளை மீண்டும் சரிசெய்து வடிகால் அமைப்புகளைப் புதுப்பிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

"கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் நீர் வடியும் வடிகால் அமைப்பு மற்றும் இந்தக் கால்வாய்களின் மொத்த நீளம் 469 கிலோமீற்றராகும். 2014 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் மற்றும் பழுதுபார்ப்புகளில், இந்த 469 இல் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் வரை மட்டுமே மணித்தியாலத்திற்கு 102 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியின் போது நீர் வெளியேறுவதற்குத் தேவையான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கடந்த காலங்களில் நீர் வடியப் பிந்தி, குறைந்த மழைவீழ்ச்சி பெய்த போதிலும் கூட இரண்டு மூன்று நாட்களாக நீர் தேங்கியிருந்த சில இடங்களில் தற்போது நீர் தேங்காமல் போனமைக்கு இந்த 400 கிலோமீற்றர் அல்ல, மாறாக 20 கிலோமீற்றர் மாத்திரம் அந்த அளவுக்கு நவீனமயமாக்கப்பட்டிருந்தமையே காரணமாகும். இதனை இன்னும் நீண்ட தூரத்திற்குச் செய்ய வேண்டியுள்ளது. அந்த இரண்டு செயற்பாடுகளும் இதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தேசிய வைத்தியசாலை வளாகத்தில் நீர் பெருக்கு நிலை ஏற்பட்டது. கொழும்பு மாநகரசபை 'நொரிஸ் கால்வாயைச்' (Noris Canal) சுத்தப்படுத்திக் கொண்டு வருகிறது, அங்கு இன்னும் 8 வீடுகள் வெளியேற்றப்பட முடியாமல் உள்ளன. அந்த மக்களுக்கு 11 மில்லியன் நட்டஈடு வழங்க முயற்சித்த போதிலும் இன்னும் அந்தப் பணிகளை முடிக்க முடியவில்லை. இரண்டு மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் பதிவான அத்தனையும் 24 மணித்தியாலங்களுக்குத்தான் பதிவாகியிருந்தன. இரண்டு மணித்தியாலங்களுக்குள் 130 - 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்துகொண்டிருந்த வேளையில், அந்த அளவே இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது." என்றார்.

கொழும்பு மாநகரசபை பொறுப்பை ஏற்கவில்லையா?

"இது இரண்டரை மூன்று வருடப் பிரச்சினை அல்ல. உண்மையில் இது போன்றதொரு இடத்தில் நீர் வடியும் செயல்முறை 100% சரியாக நடைபெறும் ஒரு கட்டமைப்பு அல்ல உள்ளது. ஒன்று, இந்த நீர் வடியும் அமைப்பு பழமையானதாக இருப்பதும் இதற்குப் பாதிக்கிறது. அதனுடன் அதிகமான மக்கள் வாழ்வது, முறையற்ற வதிவிடங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற முற்படும்போது பல சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. அந்தச் சிக்கல்களுக்கு மத்தியிலும் மாநகரசபை செய்த வேலைகள் சில உள்ளன. ஒன்று, இந்த 130 - 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஒன்றரை, இரண்டு மணி நேரத்திற்குள் கிடைத்தமையால் வடிகால் அமைப்பு நிரம்பி வழிந்து, சில இடங்களில் குப்பை போடும் இடங்களிலிருந்த குப்பைகளும் காண்கால்களில் சேர்ந்து இந்த அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபை மாத்திரம் அல்லாமல் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து ஜனாதிபதி செயலகமும் தலையிட்டு துரித வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையைப் புரிந்து கொண்டு துரிதமாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கும் உள்ளது. மறுபுறம், கால்வாய்களில் மக்காத கழிவுகளை கொட்டாமல் இருக்கப் பாடுபட வேண்டிய பொறுப்பும் பொதுமக்களுக்கு உள்ளது. கொழும்பு போன்றதொரு இடத்தில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வேலையைச் செய்ய முடியாது." என்றார்.