
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் நீக்கப்பட்டுள்ளமை, தொழிற்சங்க அடக்குமுறைகள் மற்றும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செவ்வாய்கிழமை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
நாட்டின் பல்வேறு மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்திரளான மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டு பதாகைகளையும் சுவரொட்டிகளையும் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஜனநாயக அடக்குமுறை, அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுதல் மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் கோஷமெழுப்பினர். அத்துடன் பேச்சுரிமை, அமைப்பாக ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் இக்கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கம் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கத் தவறினால், இந்தப் போராட்டம் ஒரு முதல்படி மட்டுமே என்றும், எதிர்காலத்தில் அடுத்தகட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.










.jpg)

