குடமுழுக்குக் காணும் மண்முனைக் கண்ணகி -ஒரு ஆய்வுக் குறிப்பு-

-கவிக்கோ வெல்லவூர்க்கோபால்-

(வரலாற்றுச் சிறப்புமிக்க கைதைநகர் என அழைக்கப்படும் தாழங்குடாவில் கோவில்கொண்ட மண்முனைக் கண்ணகியின் குடமுழுக்கு வைபவம் 09.05.2016ல் இனிதே நிறைவுற்றது. மண்முனைப் பிரதேசத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட கோவிலாக கருதப்படும் இவ்வாலயம் குறித்த தேடலாகவே இவ்வாய்வுக் குறிப்பு அமைகின்றது.)


தாழங்குடாவின் தொடக்க வரலாறு மண்முனைத் தேசத்தின் தோற்றுவாயை மையப்படுத்தியதாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது. கி.பி 4ஆம் நூற்றாண்டில் மட்டக்களப்புத் தேசத்தில் கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவு இடம்பெற்றதைத் தொடர்ந்ததாகவும் இது அமைகின்றது. 2005ல் நாம் இக்கிராமத்தில் ‘மட்டக்களப்பு வரலாறு’ நூலுக்காக மேற்கொண்ட களஆய்வில் உலகநாச்சியின் ஆட்சி இருக்கையானது இக்கிராமத்தில் அமைந்திருந்தமையும் அக்காலம்முதல் இக்கிராமம் மண்முனை என அழைக்கப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டது. கூடவே எருவில், பெரியநீலாவணை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை போன்ற பகுதிகளில் வாழும் தொழில்கூற்றுச் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளிலும் அவர்களில் பெரும்பாலோர் தங்களை தாழங்குடா வயிற்றுவாரெனவும் உலகநாச்சி காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தாங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் படுத்தியுள்ளனர். உலகநாச்சியின் ஆட்சி இருக்கையானது அமைந்த இடம் இன்றும் ‘பெரிய வளவு’ என அழைக்கப்படுவதையும் அதனை அண்டிய வீதி ‘மாளிகையடித் தெரு’ எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் யாதெனில் இப்பெரிய வளவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் செறிந்து வாழும் தன்மையில் இது இன்னும் வெற்றுக்காணியாகவே தென்படுவதாகும். அண்மையில் நாம் அங்குள்ளவர்கள் சிலரை சந்தித்து பேசியபொழுது அவ்வளவில் சாமி குடியிருப்பதாகக் கூறப்பட்டது. இவ்வளவினை பலரும் புனிதம்மிக்கதாக கருதவும் செய்கின்றனர். தற்போது இக்காணி மண்முனை கண்ணகி கோவிலின் பொறுப்பிலேயே உள்ளது.

மண்முனைக் கண்ணகி ஆலயத்தின் மூலஸ்தானத்தின் அமைப்பு இதன் பழமையை வெளிப்படுத்துவது அவதானிப்புக்குள்ளாகின்றது. சுமார் எட்டடி நீள அகல உயரத்தைக்கொண்டதான சிறிய மூலஸ்தான அறையில் உயரமான பீடத்தில் அம்மன் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. அறையைச்சுற்றி வெளிப்பக்கம் செல்லமுடியாதவாறு ஒரு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அதன் உள்பக்கம் வலம்வர ஏதுவாக சுமார் நாலடி உயரத்தில் இருபக்கமும் வாயில் தென்படுகின்றது. இதே போன்றதான கட்டிட அமைப்பினை தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலையமைத்த கண்ணகி கோட்டத்தின் பக்கத்தில்; அழிபாடுற்ற நிலையில் காணப்படும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக வரலாறுகூறும் - அழிபாடுற்ற கண்ணகியின் சிறியகோயில் கொண்டுள்ளமையைக் காணலாம். இதனிடையே பழமை மிக்கதான மண்முனை கண்ணகியின் தோற்றுவாய் குறித்த மூன்று வௌ;வேறு தகவல்களை கிராமத்துப் பெரியார்கள் வாயிலாக எம்மால் பெறமுடிந்தது.
01. கயபாகு மன்னனின் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதாகவும்
02. மண்முனை அரசி உலக நாச்சியால் கட்டப்பட்டதாவும்
03. கி.பி 885ல் கட்டப்பட்டதாகவும் அவை வெளிப்படும்.
முன்னைய இரு தகவல்களும் வாய்மொழி சார்ந்தும் மூன்றாம் தகவல் எழுத்துருப் பெற்றதாகவும் அமைகின்றது. மூலஸ்தான கதவு நிலையின் மேல்பக்கத்தில்  பொறிக்கப்பட்ட கல்வெட்டினை படிக்கும் வாய்ப்பு எமக்கு கிட்டாதபோதும் கிராமத்து பெரியாரான திரு காசிப்பிள்ளை அதன் பொறிப்பு கி.பி 885ல் இவ்வாலயம் கட்டப்பட்டதை குறிப்பிடுவதாக எமக்கு கூறினார்.


இங்கே கூறப்பட்ட மூன்று தகவல்களையும் ஆய்வுப்படுத்துவது பொருத்தமானதாக அமையும். இதில் கயபாகு மன்னனுடன் இணைத்துக் கூறப்படும் காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டைக் குறித்து நிற்பதால் வரலாற்று ரீதியில் அக்காலத்தே மண்முனை  உருவாகாத நிலையில் மண்முனைக் கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே கொள்ளவேண்டியுள்ளது. அடுத்த தகவல் உலகநாச்சியின் காலத்தை மையப்படுத்துவதாகும். இக்காலம் மட்டக்களப்பு தேசத்தில் கலிங்கச் செல்வாக்கு மேலோங்கிய சூழலில் பரவலாக சிவ வழிபாடு பற்றியே பேசப்படும் நிலையில் கண்ணகி வழிபாடு அவளால் தோற்றம்பெறல் சாத்தியமற்றதாகவே அமையும். கி.பி 9ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் மத்தியிலும் வட இலங்கையிலும் பண்டைய  மட்டக்களப்பின் தென்பகுதிகளிலும் கண்ணகிவழிபாடு நிலைகொண்டிருந்தமையால் கி.பி 885ல் மண்முனைக் கண்ணகி தோற்றம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. எனினும் இத்தகவலானது மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்றாகவே அமையும். இதன்மூலமே சரியான முடிவினை எட்ட வழிபிறக்கும் என நம்பலாம்.


உலகநாச்சியின் மாளிகை அமைந்த இடமாக கருதப்படும் பெரியவளவு


மாளிகையடித் தெரு

  மண்முனைக் கண்ணகி

மூலஸ்தானம்