போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு

போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் குற்றங்களுக்கு அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று  (10) இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை அமைச்சர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.


அதன் சில விபரங்கள் வருமாறு,
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல்:
•    அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.
•    போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.
•    மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.
•    புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.
•    அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்

    கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல்.
•    அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
-    குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாவும்,
-    குறிக்கப்பட்ட வேகத்தை விட 20%க்கும் அதிகமான மற்றும் 30% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாவும்,
-    குறிக்கப்பட்ட வேகத்தை விட 30%க்கும் அதிகமான மற்றும் 50% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
-    குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடல்.
•    இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல். (இக்குற்றத்துக்காக வேண்டி குறைந்த பட்ச உரிய இடத்துக்கான தண்டப்பணத்தினை 2,000 ரூபா வரை அதிகரித்தல்)
•    பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
•    பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
•    குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரித்தல்)
•    மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபா வரை அதிகரித்தல்.  
    கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபா உரிய இட தண்டப்பணத்தை அறவிடல்.