கதிர்காமம் பாதயாத்திரையில் மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம்


கதிர்காமம் பாதயாத்திரையில் ஈடுபவோர் மாணவர்களை பாதயாத்திரையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என பாண்டிருப்பு அகரம் சமூக அமையம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அகரம் அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனையிட்டு அதிகளவிலான பக்தர்கள் கால்நடையாக கதிர்காமம் திருத்தலம் நோக்கிய புண்ணியயாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர். 

இம்முறை கிழக்கிலிருந்து அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை ஆகியமாவட்டங்களிலிருந்து தினமும் அடியார்கள் கதிர்காமம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதயாத்திரையில் ஈடுபடுவோர்களுடன் அதிகமான மாணவர்களும் செல்வதனை அவதானிக்க முடிகின்றது. 

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கற்றல், கற்பித்தலில் மீட்டல் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துக்கொண்டு பாதயாத்திரையில் ஈடுபடுவதினால் அவர்களால் பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்பவர்கள் பத்து அல்லது பதினைந்து தினங்கள் எடுத்துக்கொள்வதினால் கூடச்செல்லும் மாணவர்களின் கற்றலில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம், தரம் ஐந்து புலமைப்பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணதரம் ஆகிய பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர். யாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள் மாணவர்களின் எதிர்கால கல்விச் செயற்பாட்டை கருத்தில் கொண்டு அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அகரம் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.