புனித சூசையப்பர் கல்லூரியின் உதைபந்துச் சமர்

(கதிரவன்)
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் ராஜாக்களின் உதைபந்து சமர் வெள்ளிக்கிழமை 2018.09.07 ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை 2018.09.09 நிறைவடைந்தது. இதில் யாழ்ப்பாணம் புனித ஹென்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. இறுதிப்போட்டியில் புத்தளம் ஷாகிரா கல்லூரியை எதிர்த்து விளையாடி 3 க்கு 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இளவாலை புனித ஹென்றிக்ஸ் கல்லூரி வலது பக்க முன்வரிசை வீரர் என்.சங்கீர்தனின் அதிரடியான அடுத்தடுத்த இரண்டு கோல்கள் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆட்டம் ஆரம்பித்து 17வது நிமிடத்தில் முதலாவது கோலினையும், 26வது நிமிடத்தில் இரண்டாவது கோலினையும் போட்டு தனது அணியினை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றார்.

இடைவேளையின் போது 2:0 என்று இருந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருந்து போது 49வது நிமிடத்தில் மற்றொரு முன்வரிசை வீரர் என்.மூன்றாவது கோலினை போட்டு வைத்தார். 51வது நிமிடத்தில் பின்வரிசை வீரர் தவறான எத்தனம் காரணமாக சொந்த கோல் கம்பத்துக்குள் பந்தினை செலுத்தினார். இதனால் புத்தளம் ஷாகிரா கல்லூரிக்கு ஒரு கோல் கிடைத்தது.

19 வயதுக்கு உட்பட்ட நாட்டின் பிரபல்ய 10 பாடசாலை அணிகளுக்கு இடையே லைக்கா சொக்கர் கிங்ஸ் வோர் என்னும் பெயரில் சுற்றுப் போட்டியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி; பழைய மாணவர் சங்கம் நடத்தியது.

இறுதி;போட்டி ஏகாம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 2018.09.09 மாலை நடைபெற்ற போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.இம்ரான் மகரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பதக்கம் அணிவத்து வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிக்கு 100,000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 50,000 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்ற குருணாகல் மதீனா கல்லூரி அணிக்கு 30,000 ரூபாவும், நான்காம் இடம் பெற்ற வவுனியா செட்டிகுளம் மத்திய மகா வித்தியாலய அணியிருக்கு 20,000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக ஹென்றிக்ஸ் கல்லூரி அணி வலது பக்க முன்வரிசை வீரர் என்.சங்கீர்த்தன் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இச்சுற்றுப்போட்டியில் சிறந்த கோல் காப்பாளராக குருணாகல் மதீனா கல்லூரியைச் சேர்ந்த எம்.எச்.முபாரக், சிறந்த வீரராக இளவாலை ஹென்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரெய்சனும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டனர்.