மிகச் சிறந்த வளர்ந்து வரும் இயன் மருத்துவருக்கான விருதினை பெற்ற கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்


(துறையூர் தாஸன்)

2018 ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த வளர்ந்து வரும் இயன் மருத்துவருக்கான விருதினை(Excellent upcoming Physiotherapist Award -2018) அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த இயன் மருத்துவர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் இவ்வருடம் சுவீகரித்துக்கொண்டார்.

உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில் Chartered Society of Physiotherapist -Sri Lanka அமைப்பினால் உலக இயன் மருத்துவ தினம் அமைப்பின் தலைவரும் இயன் மருத்துவருமான ஜாலிய உடுவெல்ல தலைமையிலான நிகழ்வில், அமைப்பின் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுஜீவ வீரசிங்க இவ்விருதினை வழங்கி கெளரவித்தார்.

இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக மிக குறைந்த வயதில் அரசாங்க வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் பெறுவதற்கு முதலே மிக குறுகிய காலத்தில் இயன் மருத்துவ துறையில் முதலாவது விருதை பெற்ற விருதாளர் என்ற வரலாற்று சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இவர் தனது பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த காலம் முதல் இன்று வரை இலங்கையில் இயன் மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு மக்களுக்கு மிகச் சிறந்த இயன் மருத்துவ சேவை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.