சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி




இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ்அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கை வருகைதரவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய நன்மையாக இந்த உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

தனது அரசமுறைப் பயணத்தின் இறுதி நாளான நேற்று(19) முற்பகல் பிலிப்பைன்ஸ் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அதன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது ஜனாதிபதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பொலிஸ் சேவை பிரதானியான ஓஸ்கார் டி ஆல்பாய்டே, அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் Catalino S cuy ஆகியோர் வரவேற்றனர்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான திறந்த யுத்தம் ஒன்றை தற்போது தனது தலைமையில் இலங்கை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

பூகோள முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு இலங்கை முக்கிய பரிமாற்ற மத்திய நிலையமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை தடை செய்வதற்கு அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருட்களை தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்கள் முன்னெடுத்துள்ள முக்கிய போராட்டத்தை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்த சேவையை மதிக்கும் வகையிலேயே தான் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முக்கிய சவாலாக இருந்து வருகின்றபோதும் சில அரசியல்வாதிகளும் அதில் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள பாரிய பிரச்சினையாகுமென்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விபரித்த ஜனாதிபதி, அத்தகைய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை தான் 45 வருடங்களுக்கு முன்னர் ஒரு அரச சேவையாளராக இருக்கும்போதே ஆரம்பித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகவும், பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் அதற்காக முன்னெடுத்த விரிவான நிகழ்ச்சித்திட்டங்களுக்காக உலக சுகாதார தாபனமும் தனக்கு சர்வதேச விருது ஒன்றை வழங்கி கௌரவித்தமை பற்றியும் நினைவுகூர்ந்தார்.

இன்று ஜனாதிபதி என்ற வகையில் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு முக்கியமான ஒரு போராட்டத்தில் தான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதற்காக இவ் வருடமும் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டின் பொலிஸ்அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முக்கிய பணிகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார். இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெவத்தவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.