மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அபிவிருத்திகள் தொடர்பிலான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பிலான கலந்துரையாடல்...

மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஒருவருட பூத்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று மாலை புளியந்தீவு தெற்கு வட்டார மாநாகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் அவரின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான தவராஜா, சந்திரகுமார், ராஜேந்திரம், மதன் உட்பட வட்டார மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வட்டார ரீதியில் மாநகரசபை உறுப்பினரால் இக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தியதுடன், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் மாநகர முதல்வர், மாநகரசபை உறுப்பினர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அவர்களது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், பல்வேறு கேள்விகள் மற்றும் பதில்களும் இங்கு கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.