மீண்டும் சூடு பிடிக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்


 ( ஆர்.சயனொளிபவன்  & TEAM )
மீண்டும் அரசியல் மயப்படுத்தப்படும் கல்முனை வடக்கு  செயலாளர் பிரிவு தரமுயர்த்தல் விவகாரம்
 • தமிழ் மக்களின் வாதம்
 • முஸ்லீம் மக்களின் வாதம்
 • கல்முனை விகாரதிபதியின் எண்ணப்பாடு 
 • தமிழ் அரசியலின் நிலைப்பாடு
 • முஸ்லீம் அரசியலின் நிலைப்பாடு
தமிழர் தரப்பை பொறுத்தளவில் 1989ஆம் ஆண்டு ஆரம்பித்த உப செயலாளர் தரமுயர்த்தல் முயற்சியானது  நாட்டில் அக்காலப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த  போர் மற்றும் இலங்கை அரசியலிலே 1993ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இலங்கை அரசியலில் ஆட்சி அமைக்கும் சக்தியாக தோற்றம் எடுத்த முஸ்லீம் சமூகத்தின் அரசியல், 1980களில் இருந்து தனிநாடு மற்றும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குள் முஸ்லீம் அலகு என ஆரம்பித்து தோல்விகண்ட  தமிழ் மக்களின் அரசியல்,  போருக்கு பின்பும்   தொடர்ந்தும்  அரசியல் தீர்விற்கு  முழு முக்கியத்துவம் கொடுத்து 10 வருடங்கள் கடந்தும் எது வித முன்னேற்றமோ அல்லது  குறைந்த பட்சமாக  பேச்சுவார்தை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளோ அற்றநிலையிலும்  மேலும்   கல்முனை வடக்கு உப செயலாளர் பிரிவு தரமுயர்த்தல் சம்பந்தமாக ஒரு முறையான    தீர்வை எட்டுவதற்கு வழி தெரியாமல் திக்குமுக்காடும் தமிழ் அரசியல் ஒருபக்கம் இருக்க.

மறுபக்கம் முஸ்லீம் தரப்பை பொறுத்தளவில் குறிப்பாக கல்முனைகுடியை மையமாக கொண்ட முஸ்லீம் சமூகம் மற்றும்  அரசியல்வாதிகளால்   கல்முனை பகுதியில் பூர்விகமாக வாழுகின்ற தமிழ்மக்களுக்கு   ஒரு பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்படக்கூடாதென்பதில் விடாப்பிடியாகவும்  வெற்றியளிக்கும் வகையிலும்  1990களில் இருந்து குறிப்பாக அமரர் M.H.M அஸ்ரப் அவர்களின் காலப்பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் H.M.M ஹாரிஸ் வரை தமது சமூகத்தின் அரசியல் பலத்தை  பிரயோகித்து  கல்முனை வடக்கு உப செயலாளர் பிரிவு தரமுயர்த்தலை தடுத்த வண்ணமே இருந்து வந்தனர்.

தரமுயர்த்தலுக்கான வேண்டுகோள் கல்முனை பகுதியில் வாழுகின்ற தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான இழுபறி என்ற நிலையில் இருந்து விரிவடைந்து  பெரும்பான்மை சமூகத்தின் பார்வையையும் கல்முனை வடக்கு உப செயலாளர் பிரிவு தரமுயர்த்தல் விவகாரத்தில் விழ  வைத்துள்ளது   அந்தவகையில்  JVP  பாராளுமன்ற உறுப்பின்னர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தொடர்ந்து கல்முனை பகுதியில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களை சமனாக மதிக்கும் பௌத்த  துறவியான கல்முனை விகாராதிபதி ரண்முத்து தேரர் தனது பார்வையில்  கல்முனை வடக்கு பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது  என்றும் மேலும் நியாயம் கிடைக்கவேண்டும் என கருதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியது மட்டுமல்லாது மேலும் இப் போராட்டமானது  நாட்டில் உள்ள கூடுதலான  அரசியல் வாதிகளினதும் மற்றும் அணைத்து இன மக்களின் பார்வையையும்  கல்முனை பகுதியின் பக்கம் திரும்பவைத்துள்ளது

தமிழ் மக்களின் வாதம்

30,000 மேற்பட்ட தமிழ் மக்களையும் 29 கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்டு மேலும்  பூர்விகமாக இப் பகுதியில் வாழ்ந்துகொண்டு வருகின்ற தமிழ் மக்கள் நாட்டில் உள்ள ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களை போல் தமது பகுதியிற்கும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை கோருவதில் என்ன தவறு என்பதே இப் பகுதி மக்களின் வாதமாகவுள்ளது. மேலும் இம் மக்களின் வாதமாவது

 • தமது பகுதியிற்கு அருகில் உள்ள பகுதியில் வாழுகின்ற சகோதர சமூகமானது   குறிப்பாக கடந்த 50 வருட காலப்பகுதிக்குள் சனத்தொகை, பொருளாதாரம், அரசியல்,கல்வி ஆகிய துறைகளில்  பாரிய வளர்ச்சி கண்டதனாலும் இதன் தொடர்சியாக முஸ்லீம் சமூகம் சக்திவாய்ந்த சமூகமாக மற்றம் கண்டுள்ளதும் யாவருக்கும் தெரிந்தததே அதேவேளையில் இச் சமூகம் தமது வளர்ச்சி, மற்றும் அரசியல் சக்தியை வைத்து     கல்முனை பகுதியில் பூர்விகமாக வாழுகின்ற தமிழ் சமூகத்தை தமது  கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவேண்டும்  என்று நினைப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது என்றும் 
 • 1993ஆம் ஆண்டு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவான   கல்முனை வடக்கு  பிரதேச செயலகமாக தரமுயர்த்தல் என்று   எடுத்த முடிவை அமூல்படுத்துக என்பதே கல்முனை தமிழ் மக்களின் வேண்டுகோளாகவும் . 
 • இப் பகுதியில் வாழுகின்ற  33,000 அளவிலான சனத்தொகையில் 30,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும், 29 தமிழ் கிராமசேவகர் பிரிவுகளையும், நிலத்தொடர்புள்ள தன்மையையும்  கொண்டும் மற்றும்  ஒரு  முழு  பிரதேச செயலக பிரிவிற்கு  இருக்கவேண்டிய முக்கிய காரணிகளை கொண்டிருந்தும்  ஏன் தமது பிரதேச செயலகத்தை ஒரு முழு பிரதேச செயலாளர் பிரிவாக தரம் உயர்த்த முடியாது எனவும்  
 • சட்டவிரோதமான செயலகம் என்று குறிப்பாக கல்முனை பகுதி அரசியல் வாதிகளால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுவந்த  வேளையிலயே  நிதி அதிகாரமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு  வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மக்களை பொறுத்த அளவில் முஸ்லீம் அரசியல் வாதிகள் தமக்கிடையே  உள்ள போட்டியினாலும்  தமது வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும்  மேலும் தாம்  வகிக்கும் பதவிகளில் எதிர்காலத்திலும் தக்கவைத்து  கொள்வதற்காக   மேற்கொள்ளுகின்ற  உக்திகளில் ஒன்று என்றும்    கருதுகின்றனர்.
 • குறிப்பிட்ட காலப்பகுதிகளில் போர் உக்கிரமாக நடைபெற்றதாலும் அக்காலப்பகுதிகளில் தரமுயர்த்தலுக்கான ஆதரவு திரட்டும் நிலையில் தமிழ் மக்கள் இல்லாத காரணத்தினாலும் மேலும் தமக்கு நடக்கின்ற உரிமை மறுப்பை வெளிக்கொணர்வதற்கு இயலாத நிலையில் இருந்ததனாலும்.
 • தொடர்ந்து தம்மை பிரதிநிதிப்படுத்திய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஈடுபாட்டின்  அளவினாலும் 
பிரதேசசெயலகம் தரமுயர்த்தலுக்காண முயற்சி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதும் இவர்களின் வாதமாகும்.

முஸ்லீம் மக்களின் வாதம் 

முஸ்லீம் மக்களை பொறுத்தளவில் தாங்கள் கல்முனை நகரின் அபிவிருத்திக்கு கடந்த 50 வருடகாலமாக உழைத்ததாலும் சனத்தொகை ரீதியா குறிப்பாக துறைநீலாவணையில் இருந்து சாய்ந்தமருதுவரையிலான கரையோரப்பகுதியின் நிலப்பரப்பில் வசிக்கின்ற சனத்தொகையில் தாங்கள் 70% வரையிலாக இருப்பதால் கல்முனை முஸ்லீம் மக்களுக்கு உரிய பிரதேசம் எனவும் இதனால் கல்முனை பகுதில் உள்ள அணைத்து பகுதிகளும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருக்கின்றது.மேலும்
 • கல்முனை நகரப்பகுதியில் உள்ள 90% வர்த்தக ஸ்தாபனங்கள் தமது சமூகத்தை சேர்ந்தவர்கள் வைத்திருப்பதாலும் 
 • கல்முனை வடக்கு தமிழ் பகுதிக்குள் தமது சமூகத்தை சேர்ந்த 3,000 வரையிலான மக்கள் நிலத்தொடர்பற்ற பகுதிகளுக்குள்  வாழ்வதாலும் மேலும் அவர்களின் நலன் கருதியும்
காணி மற்றும் நிதி சம்பந்தமான விடயங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசப்பிரிவிற்குள் இருக்கவேண்டும் எனவும் வாதிடுகின்றனர்.   ஆனால் தற்போது நிதி அதிகாரம் கல்முனை  வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

கல்முனை விகாரதிபதியின் எண்ணப்பாடு


கல்முனை விகாராதிபதி ரண்முத்து சங்கரட்ன தேரர் கல்முனை பகுதியில் கடந்த 20 வருடகாலமாக வாழ்ந்து வருகின்ற ஒரு பௌத்த  மத துறவியாவர் மேலும் தமிழ் முஸ்லீம் சமுகங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரும் குறிப்பாக இனங்களுக்குள்ளே சமாதானம், சமத்துவம்,ஒற்றுமை, நியாயம் மேலும் மனிதநேயத்திற்குரிய நற்குணங்கள் நிலவவேண்டும் என விரும்புகின்ற ஒரு மத துறவியும் ஆவார் . அதேபோல் இப் பகுதியில் வாழ்கின்ற தமிழ் முஸ்லீம் சமூகங்களும் இவரை பெருமளவில் மதிக்கின்ற தன்மையையும் அதன் ஒரு தோற்றப்பாடாக இப் பகுதியில் வாழ்கின்ற சகல இன மக்களின் மத நிகழ்வுகளில் தேரர் கலந்து கொண்டு தமது எண்ணப்பாடுகளையும் தெரிவிப்பதும் அண்மைய காலங்களில் இடம்பெறுகின்ற ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த மாதம் இடம்பெற்ற முஸ்லீம் மக்களின் இஃப்த்தார்   பெருநாளில் தேரர் ஒரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு மேலும் அந்த நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரை சமூகவலைதளங்களில்   பரவியதுடன்  நல்ல வரவேற்பையும் பெற்றது  அவரின் தனி தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக முஸ்லீம் சமூகம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்பு பெரும் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருந்த வேளையிலயே தேரர் குறிப்பிட்ட இஃப்த்தார் பண்டிகைக்கு சென்று முஸ்லீம் சமூகத்திற்குள் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பும் முகமாகவும் மற்றும் முஸ்லிம்சமூகத்தில் மற்றைய சமுகங்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையை களையும் முகமாகவும் இஸ்லாம் கூறும் நல்லகருத்துக்கள் முதல் தனக்கு தமிழை கற்பித்த ஆசானும் முஸ்லீம் மதத்தை சேர்த்தவர் என்று கூறியது மட்டுமன்றி தமக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் உள்ள உறவு முறையை பல உதாரணம்களின் மூலம் விளக்கினார்.

இதே தேரர் கடந்த மாதம் 12ம் திகதி கிழக்கு இலங்கை இந்துக்கள் குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ  க.கு. சச்சிதாநந்தகுருக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆலக்கோன் விஜயரட்ணம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோருடன் சேர்ந்து தமது தலைமயில் கல்முனை தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கிடைக்கும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை 5 நாட்கள் வரை தொடர்ந்தது மட்டுமன்றி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் பிரதேச செயலகமாகும் என்ற உறுதி மொழி வழக்கப்படும்வரை இவர்களது போராட்டம் தொடர்ந்தது என்பதும் யாவருக்கும் தெரிந்தவிடயமாகும். 

இப் பகுதியில் வாழும் சகல இன மத மக்களையும் இதய பூர்வமாக மதிக்கும் தேரரின் தலைமையிலான உண்ணாவிரதப்போராட்டம் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கான நியாய தன்மையை தெட்டத்தெளிவாக எடுத்து காட்டுகின்றது.


தமிழ் அரசியலின் நிலைப்பாடு 


தமிழ் அரசியல் தலைமைகளை பொறுத்தளவில் முஸ்லீம் மக்கள் மற்றும் அரசியல் வாதிகளோடு இணக்க அரசியல், மேலும் இணைந்த அரசியல் தீர்வு, என்ற தோற்றப்பாட்டிலயே சென்றுகொண்டிருப்பதை இன்றும் தெளிவாக காணக்கூடியதாவுள்ளது. முஸ்லீம் அரசியலை பொறுத்த அளவில் 1990களில் இருந்து இன்றுவரையிலான காலப்பகுதியில் பல முறை எமது நாட்டின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. கல்முனை  விடயத்தை பொறுத்தளவில் தமிழ் அரசியல் தலைமையால் சக்திவாய்ந்த முஸ்லீம் அரசியல் தலைமையிடம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு முழுமையான நியாயம் பெறமுடியாத நிலையில்லேயே இருந்தார்கள். , மேலும் தமிழ் தலைமைகளை பொறுத்தளவில்
 • கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகளை அறியாதவர்களாகவும் 
 • ஒரு பிரதேச சபை தரமுயர்தலுக்கே திண்டாடும்போது குறிப்பாக கிழக்கில் எவ்வகையான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்பதையும்   
 • கடந்த நான்கு அரை வருடகாலம் நல்லாட்சி அரசின் பங்காளியாக இருந்து மேலும் நிபந்தனை அற்றமுறையில் ஆதரவை வழங்கி சாதித்தது என்ன என்பதையும் 
 • குறிப்பாக தமிழ் அரசியலை பொறுத்தளவில் தமிழ் தேசிய கட்சியில் இருந்து விலகி தற்போது தன்னிச்சையாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கல்முனை தமிழ் மக்களுக்காக  பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுப்பதும் சில சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்ககுள்ளாகின்றது அதாவது இவரும் முஸ்லீம் அரசியல் வாதிகளை போல் தமது வாக்குவங்கியை நோக்கிய அரசியல் நடத்துகின்றாரோ  எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் 
மேலும்  கல்முனை வடக்கு  உப பிரதேச செயலக தரமுயர்த்தலை பொறுத்தவரையில் தமிழ் அரசியல் தலைமையால் அதிகூடிய அதிகாரப்பகிர்வாக நிதி அதிகாரத்தை பெறக்கூடிய தன்மையில்லேயே இருந்ததையும் ஆனால் தேரர் தலைமையிலான நியாயத்திற்கான உண்ணாவிரத போராட்டம் முழு அளவிலான தரமுயர்த்தலுக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும் மேலும் இவ் விடயத்தை பொறுத்தளவில் தமிழ் தலைமை கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் செல்வாக்கை பெறக்கூடிய ஒரு வாய்ப்பையும் இழந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆனால்

கடந்த ஓரிரு தினங்களில் JVPயினர் அரசிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலை நிபந்தனையாக வைத்து குறிப்பிட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன அவர்களது இம் முயற்சியானது தமிழ் மக்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அதே வேளையில் இச் சந்தர்ப்பத்தை உரியமுறையில் பயன்படுத்தாத பட்சத்தில் தமிழ் தேசிய கட்சி தமிழ் மக்களுக்கிடையே மீண்டும் ஒருமுறை பெரும் அதிருப்திக்கு உள்ளாகுவார்கள் 

முஸ்லீம் அரசியலின் நிலைப்பாடு 


எமது நாட்டின் அரசாங்கத்தை நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருந்து குறிப்பாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கி நிற்கும் முஸ்லீம் சமூகத்திற்கு கைகொடுக்க முடியாத அளவிற்கு முஸ்லீம் அரசியல் பலவீன தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று சகாப்தங்களாக தொடர்ந்து வரும் அரசாங்ககளில் அமைச்சர்களாகவும் ராஜாங்க, மற்றும் பிரதி அமைச்சர்களாகவும் பதவிவகித்த முஸ்லீம் அரசியல் வாதிகள் அனைவரும் இருவரை தவிர இன்றுவரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகிப்பதும் முஸ்லீம் அரசியலின் உறுதித்தன்மையை மேலும் இக் குண்டுத்தாக்குதல்கள் எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை காட்டுகின்றது. அதேவேளை இதுவரை  கல்முனை வடக்கு  தரமுயர்த்தலுக்கு தடையாக இருந்த பலம் வாய்ந்த முஸ்லீம் அரசியல் இன்று பலவீனமடைந்த நிலையிலும் அத்தோடு முஸ்லீம் மக்களிடம் தமது இருப்பை தக்கவைத்து கொள்ளுவதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கிழக்கில் பல பகுதிகளுக்கும் சென்று முஸ்லீம் மக்களின் உணர்சிகளை தூண்டும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்ளுகின்ற யுக்தியையும் காணக்கூடியதாகவும் உள்ளது . மேலும்


 • கல்முனை பகுதியில் உள்ள முஸ்லீம் அரசியலின் பீதி தன்மையை தெளிவாக காட்டுகின்றது.  அண்மைக்காலமாக கல்முனை பகுதியில் உள்ள முஸ்லீம் சமுகங்களிற்குள் சாய்ந்தமருது பகுதியிலுள்ள மக்கள் தமக்கென ஒரு தனி பிரதேச சபையை கோரி கடந்த உள்ளூர் ஆட்சி மன்றத்தேர்தலிலும் தனித்து நின்று போட்டியிட்டதை தொடர்ந்து அங்குள்ள 19,300 மேற்பட்ட வாக்காளர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தெரியாத நிலையில் மேலும் வட கல்முனை பிரதேச செயலகம் உருவாக்கம் இப்பகுதியில் இருந்து  முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாராளுமன்றம் செல்லும் தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கலாம். இதன் பிரதிபலிப்பாக முஸ்லீம் மக்களிற்கு இடையே தமது செல்வாக்கை அதிகரிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் அவர்கள் நடந்துகொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.
 • தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில் குறிப்பிட்ட முஸ்லீம் அரசியல் வாதிகளால்   தற்போது  நடாத்தும் இவ் வகையாக  உணர்சிகளை ஏற்படுத்தும்  போராட்டங்களை போல் எண்ணிக்கையற்ற  போராட்டங்களை  பல சகாப்தங்களாக பார்த்தவர்கள் மேலும் இவ் வகையான போராட்டங்கள் அரசியல் வாதிகளின் இருப்பை பலப்படுத்துமே தவிர அவர்கள்  சார்ந்திருக்கும் சமூகதை பலவீனப்படுத்தும் என்பதும் தமிழ் சமூகத்தின் அனுபவத்தில்  இருந்து கற்றுக்கொள்ளகூடியதாகவுள்ளது .
 • மேலும் தேரரின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்ற வேளையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்முனைக்குடி பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களாலும் மற்றும் அப் பகுதி அரசியல் வாதிகளாலும்  மேற்கொள்ளப்பட்ட முயற்சியிற்கு குறிப்பிட்ட பகுதியில் வாழும்  முஸ்லீம் சமூகத்தின் ஆதரவை பெற முடியாததால்  தோல்வியைகண்டதையும் 

மேலும் முஸ்லீம் அரசியல் வாதிகளின் இவ்வாறான செயற்பாடுகள் இருவிடயங்களை தெளிவாக காட்டுகின்றது
 •  கல்முனை வடக்கு  உப செயலகம் தரமுயர்த்தலுக்கான கால எல்லை வெகுதொலைவில் இல்லை என்பதையும் 
 • தரமுயர்த்தலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த முஸ்லீம் அரசியல்வாதிகள்  அரசியல் ரீதியாக பலவீன  தன்மையை அடைந்ததையும்.
மேலும் முஸ்லீம் அரசியல் வாதிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளும் யுக்திகள் சமுகங்களுக்கிடையேயானா உறவுமுறையில் அழுத்தத்தை கொடுக்கும் முடிவாகவும் அமைந்துள்ளது

கல்முனை பகுதியில் பூர்விகமாக வாழுகின்ற தமிழ் மக்களின் நீண்ட கால நியாயபூர்வமான உப செயலக தரமுயர்த்தலுக்கான கோரிக்கையை  ரண்முத்து சங்கரட்ன தேரர் தலைமையிலான மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து உத்வேகம் பெற்றுள்ளது. மேலும் இப் பிரதேச செயலக பகுதியில் வாழும் 10% அளவிலான முஸ்லீம் சமூகத்திற்கு பெருமளவிலான அசௌகரியங்களை  ஏற்படுத்தாத  வகையில் தெளிவான வகையில் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட இப் பகுதிகள் கல்முனை முஸ்லீம்  பிரதேச செயலாளர்   பகுதியுடன் இணைக்கப்படுவதற்கான பொறிமுறைகள் முடிவிற்கு வருகின்ற பட்சத்தில் கல்முனையில் தமிழ் மக்களுக்கான ஒரு பிரதேச செயலகம் உதயமாகுவதற்கு உள்ள சாத்தியப்பாடுகளே அதிகமாக தென்படுகின்றன. மேலும் இவ் விடயத்தை இரு சமூகத்தையும் சேர்ந்த அரசியல் வாதிகள்  அரசியல் மயப்படுத்தாதவிடத்து இரு சமூகங்களிற்கும்  இடையே ஒரு நெருக்கமான உறவுமுறை இல்லாவிட்டாலும் ஒரு சுமுகமான உறவுமுறை தொடர்வதே இரு சமூகங்களுக்கும் ஆரோக்கியமானது .

(ஆர்.சயனொளிபவன்  & TEAM - BATTINEWS  )