சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டும்



ஏ.எம்.றிகாஸ்


சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஒற்றுமைப்பட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டுமென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் எமது நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.

ஏறாவூரில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் --வடக்குகிழக்கு மக்கள் எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அரசியல் ரீதியில் பிரிந்துவிட்டது என்று அர்த்தப்படும். 

2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததன்மூலம் இந்த நாடு இணைந்துவிட்டது என்று அர்த்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்ட முடிவை அறிவிக்க முடியுமானால் தேர்தலுக்கு முன்னரே வெற்றியாளரை தீர்மானிக்க முடியும். இதற்காக தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் தற்காலிகமாக தமது தனித்துவமான, அடையாள அரசியலை மறக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழர்களிடத்தில் தடுமாற்றமும் முஸ்லிம்கள் ஒரே வேட்பாளருக்குத்;தான் வாக்களிப்பார்கள் என்ற ஊகமும் சிறுபான்மைச் சமூகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் தரமாட்டாது. முஸ்லிம் அரசியலிலுள்ள பயமும் கோபமும் தணிக்கப்படாதவரை முஸ்லிம்களை அரசியல்ரீதியில் திருப்திப்படுத்த முடியாது.

யாரும் சொல்லித்தருகின்ற உணர்ச்சிவசப்படுத்தப்படுகின்ற மற்றும் கோரிக்கை அரசியலிலிருந்தும் விடுபட்டு புத்திசாலித்தனமான திடகாத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ் முஸ்லிம் புதிய தலைமுறைகள் முன்வர வேண்டும்.

இதேபோன்றுதான் கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒப்பந்தங்கள் செய்ததாக கூறப்பட்டது. இதுஅரசியலில் சகஜமாகிவிட்டது. நீண்டகாலமாக கோரிக்கைகளை முன்வைத்து உத்தரவாதம் வழங்கப்பட்டதில் காற்றில் பறக்காத உத்தர வாதம் இருக்கிறதா ? என்று கேட்கவேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தபோது நாட்டில் எதனையம் செய்துவிட்டு புலிகளின் தலையில் போட முடியுமாக இருந்தது. இப்போது முஸ்லிம் பெயரில் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இப்போது எதனையும் செய்துவிட்ட முஸ்லிம்களில் பழியைப்போடமுடியுமாக உள்ளது.

அப்போது போட்டபழி தமிழர்களுக்கு ஆபத்து, இப்போது போடும் பழிகள் முஸ்லிம்களுக்கு ஆபத்தாக இருக்கிறது.

போர்ச்சூழல் காலத்தில் முஸ்லிம்களைக் கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பது மறைக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கிலிருந்த புலிகளை குற்றஞ்சுமத்திவிட்டு அந்த இயக்கம் தப்பிக்கொள்ள முடியாது. அவ்வாறாயின் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பிரிந்து செயற்பட்டார்களா என்பதை புலிகள்தான் சொல்லவேண்டும். கிழக்கு மாகாணத்திலே இருந்த முஸ்லிம்களுக்கெதிரான வக்கிர உணர்வுகளுடன் இருந்த விடுதலைப்புலிகளை பிரபாகரனால் கட்டுப்படுத்த முடிந்திருந்ததா? என்ற கேள்விக்கு தமிழ்த் தேசியம்தான் பதில்சொல்லவேண்டும்.

எதுஎவ்வாறிருப்பினும் ஏறாவூரில் கொல்லப்பட்டவர்களதும் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் கொலைசெய்யப்பட்ட சிவில் சமூகத்தையும் நினைவு கூர்ந்து ஒரே நிகழ்வாக அனுஷ்டிக்க முடியுமாக இருந்தால் அன்றே தமிழ் முஸ்லிம் உறவு வெற்றிபெற்றுவிட்டது என்று கூறலாம்.