வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம்



(வி.சுகிர்தகுமார் )

கடந்த காலத்திலே நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. வெள்ளை வான் கடத்தல் தாராளமாக நடைபெற்றது வெளியிலே செல்லுகின்றவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்களோ எனும் அச்ச நிலை உருவானது. இந்நிலை மீண்டும் உருவாக நாம் அனுமதியோம் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று மாலை (13) பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பாக விழிப்பூட்டல் மற்றும் குறைவீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காசேலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

இன்று ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டக்காரர்கள் சுயாதீனமாக வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களும் சுயாதீனமாக போராடுகின்றன. இவ்வாறான நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் கடந்த ஆட்சிக்காலத்தில் மறுக்கப்பட்டிருந்தது எனவும் கூறினார்.

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் உருவாகக்கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம். இதனை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியாக சிந்தித்து செயலாற்றும். சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும். அவ்வாறு தெரிவு செய்யும் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளோடு நாம் இணைத்து செயற்படும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

வாழ்வதற்கே வீடற்ற கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் நிலை கண்டு மனம் வருந்தினேன். அவர்களின் தேவையை எவ்வாறாயினும் பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணினேன். அந்த எண்ணத்தின் சிந்தனையின் அடிப்படையிலேதான் குடியிருப்புக்களை அமைக்க முதற்கட்ட நிதியை வழங்கி வருகின்றேன். தற்போது வீட்டுப்புனரமைப்பிற்காக வழங்கப்பட்டுவரும் நிதிக்கு மேலாக இரண்டாம் கட்ட நிதியை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்

உறுதி வழங்குகின்றேன் என்றார்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் மாத்திரம் 4500 குறைவீடுகளை திருத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 142 ஆலயங்களுக்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமான அபிவிருத்திகள் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இரு விடயங்களில் சமாந்தரமாக பயணிக்கின்றது. ஒரு புறம் அபிவிருத்தி எனும் பாதையில் பயணிக்கும்போது மறுபுறம் தமிழ் மக்களின் உரிமையினை பெற முயற்சிக்கின்றது என்றார்.

நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 585 குறைவீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காசேலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.