கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன?ஆர் .சயனொளிபவன் & TEAM 
 • கிழக்கில் தமிழ் மக்களின் நிலைமை
 • வடக்கின் நிலைமை வேறுபட்ட நிலையில்
 • கிழக்கு மக்களின் தேவையை அறிந்து ….
 • தமிழ் மக்கள் ஒரு அணியாக
 • வாக்களிப்பு விகிதமும் மக்கள் பிரதிநித்துவமும்

கிழக்கில் தமிழ் மக்களின் நிலைமை

கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பார்ப்போமாயின்  பல்வேறு நெருக்குவாரம்களின் மத்தியிலும் ஒருபக்கம் ஒரு கொடிய யுத்தத்திற்கு முகம் கொடுத்ததும் மறுபக்கம் மற்றைய இரு சமூகம்களோடும் பல நெருக்குவரம்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டும் கடந்த 30 வருடகால பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பொறுத்தளவில்  வடக்கிலும் இல்லாதவாறு 100% மும் ( ஒரு 1 ½ வருடங்கள் தவிர்ந்த ) கிழக்கின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்ததும்  ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் இதே தன்மை கிழக்கில் தொடருமா என்று தற்போது உள்ள  நிலைமைகளை வைத்து பார்ப்போமாயின் .    

 • பொதுவாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான சந்தர்ப்பம்  அருகிவரும் நிலையிலும் குறிப்பாக கிழக்கின் மொத்த சனத்தொகையில் தமிழ் சமூகத்தின் சனத்தொகையானது 40% ற்கு குறைவாக உள்ள நிலையில் அரசியல் தீர்விற்கான சந்தர்ப்பம் மிக மிக அரிதாகவே உள்ள வேளையில் . 
 • 25 வருடகால போரின் தாக்கத்தால் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையே  போராட்டமாக மாறியுள்ள இக் காலப்பகுதியில் 
 • மூன்று சமூகம்கள் வாழும் கிழக்கில் தமிழ் மக்களின் நிலைமை கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மற்றும் குறிப்பாக தமிழ் பகுதிகளில் அடிப்படை கட்டுமானம் போன்ற மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத  முக்கியமான காரணிகளில் 25 வருடங்களுக்கு முன் முதல் நிலையில் இருந்த தமிழ் சமூகம் தற்போது மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் 
 • வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள்   சம்பந்தமான புள்ளிவிபர தரவரிசையில் மட்டக்களப்பு மாவட்டம் எமது நாட்டில் உள்ள 24 மாவட்டங்களிலும் 24 ஆவதாக உள்ள நிலையில். கிழக்கில் உள்ள கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பார்ப்போமாயின் அது   அண்ணளவாக 220,000 ஆகவும்   இவற்றுள்   130,000 வாக்கு வங்கியை மட்டக்களப்பு மாவட்டம் கொண்டுள்ள  இவ் வேளையில், அதாவது கூட்டமைப்பின் 60% வாக்குவங்கியை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களிடையே வறுமை தாண்டவமாடும் வேளையில். இதே நிலைமை 29% தமிழ் மக்கள் வாழும் திருகோணமலை மாவட்டத்திலும் 18% தமிழ்  மக்கள் வாழும் அம்பாறை மாவட்டத்திலும் இருக்கலாம். 

நிலைமை இவ்வாறு உள்ள நிலையில் கிழக்கில் உள்ள  தமிழ் மக்களின் நம்பிக்கையை கொண்ட தமிழ் தலைமை தங்களை நம்பியுள்ள தமிழ்  மக்களை சரியானமுறையில் வழிநடத்தி செல்வது மட்டுமன்றி மற்றைய சமுகங்களுக்கு நிகரான வகையில் தமிழ்மக்களின் இருப்பையும் உறுதி  செய்யவேண்டிய தார்மிக கடமைப்பாடும்  தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உள்ளது மேலும் இக் கடமைப்பாட்டை இவர்கள்  சரியாக செய்கின்றார்களா என்ற கேள்வியே தமிழ் மக்களிடையே தற்போது  பெருமளவில் எழுப்பப்படுகின்றது.


வடக்கில்  நிலைமை வேறுபட்ட நிலையில்

டக்ளஸ் தேவானந்தா , ரி.மகேஸ்வரன் , விஜயகலா மகேஸ்வரன் ,
அல்லிராஜா சுபாஷ்கரன் {  இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் }
தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கு வடக்கை விட மூன்று விடயங்களில் வேறுபட்டு காணப்படுகின்றது

1).வடக்கை போல் அன்றி கிழக்கில் தமிழ்,முஸ்லீம், சிங்கள சமூகம் கணிசமாக விகிதத்தில்  வாழ்வதாலும் இவ்வாறன சூழ் நிலையில் ஒரு சமூகம்    சரியான முடிவுகளை எடுத்து இயங்கா விடில் அந்த சமூகம் கீழ் நிலைக்கு தள்ளப்படக்கூடிய நிலையே உருவாகும் அதேபோல்   இன்று  கிழக்கில் உள்ள  தமிழ் சமூகமும்  கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட  நிலையே காணப்படுகின்றது

2). வடக்கை பொறுத்தளவில்  கடந்த 30 வருட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  தவிர்ந்த மாற்று கடசிகளிலும் இருந்தும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவதாலும் மேலும் அவர்கள் தொடர்ந்து வந்த அரசாங்கம்களில் அமைச்சு அளவில் அங்கம் வகிப்பதாலும் அதேவேளை  கிழக்கில் உள்ள மாற்று அரசியல் தலைமைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  வடக்கின் மாற்று அரசியல் தலைமைகள்  தமது சமூகத்திற்கு பெருமளவு சேவைகளை தொடர்ச்சியாக செய்வதாலும்  டக்லஸ், மகேஸ்வரன்  போன்றோர் வடக்கு வாழ் மக்களால் மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் காணக்கூடியதாக உள்ள அதேவேளை  இவர்களின் செயற்திறமையால் போர்காலம் மற்றும் போருக்கு பின்பும் கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகள் கண்ட அபிவிருத்தியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வடக்கு பெருமளவு அபிவிருத்தியை  கண்டுள்ளது .

3). வடக்கில் இருந்து 1 மில்லியன் ( 10 இலட்சம் ) அளவு மக்கள் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடம் பெயர்ந்து  சென்றது மட்டுமல்லாது அவர்களில் கணிசமானோர்  சென்ற நாடுகளிலும்   சிறப்பாக  செயற்படுகின்றனர்   அது மட்டுமல்லாது மேலும் இவர்களுக்கு நாட்டு பற்று அதிகளவில் இருப்பதாலும் தாம் பிறந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும்  பல்வேறுபட்ட அபிவிருத்தி முயற்சிகளுக்கு  பெருமளவு நிதியையும்  வழங்கிவருகின்றனர் . புலம்பெயர் தமிழர்களின் இப் பங்களிப்பானது    வட பகுதி மக்களையும்   பொருளாதாரத்தையும்   ஆரோக்கியமான  நிலையில் வைத்துள்ளது .

மாறாக கிழக்கில் இருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 50,000 அளவிலான மக்கள் சென்றுள்ளதாலும் மேலும்   பல இலட்சக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றதாலும் இவர்களில் கணிசமானோர் அவ் வேளைகளில் உயிர் பாதுகாப்பு கருதி சென்றதால்  மிக குறுகிய ஊதியத்தை பெறுகின்ற தன்மையையும் காணக்கூடியதாகவும் உள்ளது. இந் நிலமை வடக்கிலும்   கிழக்கிலும்   வாழ்கின்ற மக்களுக்கிடையே பொருளாதார ரீதியில் பாரிய  இடைவெளியை உருவாக்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட முக்கிய காரணங்களினாலும்   வடக்கில்  வாழும் தமிழ்  மக்கள்  மிகவும் உறுதியான நிலையில் உள்ளனர். மேலும் வடக்கை  கிழக்குடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கொடிய போரால் பாரிய பின்னடைவுகளை  சந்தித்த போதிலும்  குறுகிய காலப்பகுதிக்குள் தங்களுடைய   அடிப்படைத்தேவைகளை நிவர்த்திசெய்யக்கூடிய சமூகமாக மற்றம் கண்டுள்ளனர்  . அதனால் தமிழ் தலைமைகளை பொறுத்த அளவிலும்  தொடர்ந்தும் தீர்வுத்திட்டத்தில் கூடிய கவனம் செலுத்தலாம் என்ற நிலைப்பாட்டில்  உள்ளனர். மேலும் வட மாகாணத்தை பொறுத்தளவில் இக் கொள்கை மிகவும்  பொருத்தமாகவும் உள்ளது. ஆனால் கிழக்கில் நிலமையோ  அவ்வாறு இல்லை.


கிழக்கு மக்களின் தேவையை அறிந்துகிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை  இங்குள்ள மற்றைய  இரு சமுகங்களுடனும்  ஒப்பிட்டு பார்ப்போமாயின் மற்றைய  இரு சமூகங்களையும் பொறுத்தளவில்  தம்மை பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல் தலைமைகள் தங்களது மக்களின் நாளாந்த வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு  பங்கு கொள்கிறார்களோ அதே போல்  மிகவும் கீழ் நிலையில் உள்ள  தமிழ் சமூகமும் எதிர்பார்ப்பதும்     தங்களுடைய அரசியல் தலைமைகளும் தமது  வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காளிகளாக இருக்கவேண்டும்  என்றுதான்

அதேவேளை தமிழ் தலைமையை பொறுத்தளவில்   தற்போதும்  கிழக்கிற்கு   சிறிதளவும் பொருத்தமற்றமுறையில் 70 வருடங்களுக்கு முன்பு வகுக்கப்பட்ட  தமது ஒரே அரசியல் கொள்கையானா  அரசியல் தீர்வு ஒன்றுதான் என்ற எண்ணப்பாட்டில் இருந்து மிகவிரைவில் வெளியே வருவது மட்டுமன்றி  கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை  முன்னேற்ற கூடிய வகையில்  தெளிவான அரசியல் கொள்கையுடன் பயணிக்காவிடின்  முதலாவதாக இங்குள்ள தமிழ் சமூகம் மிகவும் பின்னிலைக்கு தள்ளப்பட்டுவிடும் இரண்டாவதாக  வருகின்ற பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தமிழ் கூட்டமைப்பு பெரும் சரிவை சந்திப்பதற்குரிய சந்தர்ப்பங்களுமே   அதிகமாகவும்  காணப்படுகின்றது . அது மட்டுமல்லாது கிழக்கில் உள்ள  தமிழ் மக்களிடையே அரசியலில் பெரும் பிளவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தும்.தமிழ் மக்கள் ஒரு  அணியாக

கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது வேண்டிநிற்பது தமிழ் மக்கள் ஒரு அணியாக சேர வேண்டும்  என்பதேயாகும் அதே வேளை கிழக்கை பொறுத்தளவில் குறிப்பாக தேர்தல் காலங்களில் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் பல அரசியல் அமைப்புகள் உருவாகுவதும் பின்னர் அவை இடம் தெரியாமல் போவதும் காலம் காலமாக பார்த்த ஒரு விடயமாகவும். ஆனால் நாங்கள் இங்கு பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் அண்மைக்காலமாக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அல்லது தமிழ் மக்களின் கணிசமான வாக்குவங்கியை கொண்டவர்கள்  யார் என்பதேயாகும் 
 • முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு. இவ் அமைப்பானது கிழக்குமானத்தில் தம்வசம் அண்ணளவாக
திருகோணமலை மாவட்டத்தில் 5,000
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,000
அம்பாறை மாவட்டத்தில் 5,000

வாக்குகளையும் கொண்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில்       அண்ணளவாக 25,000 வாக்குகளை கொண்ட ஒரு அமைப்பாகும்.

 • முன்னால் பிரதி அமைச்சர்   கணேசமூர்த்தி அவர்கள், கிழக்கின் அரசியலில் கடந்த 30 வருட காலத்தில் ஒருமுறை பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒரே ஒரு அரசியல்வாதியுமான  இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்வசம் 10,000 அளவிலான வாக்கு வங்கியையும் கொண்டுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமுமாகும் .
 • பாராளுமன்றஉறுப்பினர் வியாழேந்திரனின் பிரிவு 
அவர் சென்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு 35,000 அளவிலானவாக்குகளை பெற்றார். ஆனால் இவரை போன்றுதான் 2005 நடைபெற்ற பொதுதேர்தலில்   தங்கேஸ்வரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு 40,000 வாக்குகளை பெற்றார் மேலும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி 2010 யில் நடைபெற்ற பொது தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு 2,000 அளவிலான வாக்குகளையே பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஒரு இளைஞர் போல் தோற்றமளிப்பதுடன் தற்போது தனது செயலாலும் பேச்சு வல்லமையாலும் பெருமளவு மக்களை கவரும் ஒருவராகவும்  மக்கள் மத்தியில் தென்படுகின்றார் . மேலும் கடந்த பொது தேர்தலில் இவர் பெற்ற விருப்புவாக்குகளில் கணிசமானஅளவு இவருடைய தனிப்பட்ட செல்வாக்காலும் அளிக்கப்பட்ட வாக்குகள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். இதனால் இவர் வருகின்ற தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவார் மற்றும் எந்த அளவிலான வாக்கினை பெறுவார் என்பன  கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஒருமைப்பாடு என்று கூறும் போது இவர்கள் அனைவரினதும் வாக்கு வங்கியை ஒன்றிணைப்பதேயாகும். ஒரு சிறு அமைப்பாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இருந்து சாதிப்பதனை விட ஒரு பெரிய செயல் திறன் உள்ள அமைப்பாக ஒரு சமூகம் இயங்கும் போது எமது நாட்டில் உள்ள தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் சூழ்நிலையையும் கருத்தில் கொள்வோமாயின் முஸ்லீம் சமூகம் போல் நாமும் எமது சமூகத்திற்கு பெரும் நன்மைகளை பெறக்கூடியவகையில் பயணிக்கலாம்     . அதேவேளை  இவர்கள் அனைவரையும் ஒரு அணிக்குள் கொண்டு வருவதென்பதும்  மிக கடினமான ஒரு விடயமுமாகும் .வாக்களிப்பு விகிதமும் மக்கள் பிரதிநித்துவமும்

கடந்த 2015 ஆம் ஆண்டு  பொது தேர்தலில் கிழக்கில் உள்ள சமுகங்களுக்கிடையேயான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பார்ப்போமாயின்


 • தமிழ்  சமூகம் சனத்தொகை  38% பாராளுமன்ற பிரதிநித்துவம் 5
 • முஸ்லீம்  சமூகம் சனத்தொகை  39% பாராளுமன்ற பிரதிநித்துவம் 7
 • சிங்களம்   சமூகம் சனத்தொகை  22% பாராளுமன்ற பிரதிநித்துவம் 4


குறிப்பாக  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்பு  அனைத்து முஸ்லீம் அரசியல் கட்சிகளும்  தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது சமூகத்தின் நன்மை கருதி ஒரு குடைக்குள் இருந்து இயங்குவது போன்று மேற்குறிப்பிட்ட அனைத்து தமிழ் அணிகளும்  விட்டு கொடுப்புகளுடன்  தமது சமூகத்தின் நன்மைகருதி ஒரு அணியாக மாற்றம் காணுமேயானால் தமிழ் மக்களினிடையே தற்போது உள்ள வாக்களிக்கும் விகிதமான 60% விகிதத்தை ( மற்றைய இரு சமுகங்களின் வாக்களிக்கும் விகிதம் 75% மாக  உள்ள நிலையில்) கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும்  மற்றைய இரு சமுகங்களைப் போல் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தினையும்    நிச்சயம்   அதிகரிக்கும் அதுமட்டுமல்லாது ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்  ஒன்று சேர்ந்த ஒரு சக்தி வாய்ந்த  அமைப்பு தமது சமூகத்தை முன்பு இருந்த நிலைக்கு கொண்டு சேர்க்கும் என்பதிலும்  எந்தவொரு ஐயமுமில்லை.

குறிப்பாக தமிழ் தலைமைகளை பொறுத்தளவில் வடக்கு கிழக்கு மக்கள் சம்பந்தமான முக்கியமான தீர்மானங்கள் எடுக்கின்ற போதெல்லாம் கிழக்கில் உள்ள தலைமைகளின் எண்ணப்பாடுகளும் முழுதாக உள்வாங்கப்படுகின்றதா எனும் கேள்வி எழுகின்றது  ஏனெனில் வடக்கில் உள்ள களநிலைமைகளை மையமாகவே வைத்தே வடக்கு கிழக்கு மக்கள் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்த அளவில் அவர்களில் பெரும்பாலோரின் நிலமை இவ்வாறே உள்ளது அதாவது    தங்களுடைய அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதே ஒரு போராட்டமாக மாறியுள்ள தன்மையும் தெளிவாக தென்படுகின்றது  மேலும் இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் ஜனநாயக பொறிமுறையில் நம்பிக்கை அற்றவர்களாகவும் இதனை தமிழ் மக்களின் சனத்தொகை விகிதம் வாக்களிக்கும் விகிதம் மற்றும் பாராளுமன்ற பிரதிநித்துவம் என்பன தெளிவாக காட்டுகின்றது . இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைக்கும் கிழக்கில் உள்ள சாதாரண தமிழ் மக்களுக்கும் தொடர்பே அற்ற தன்மையை  அவதானிக்க கூடியதாகவுள்ளது  மேலும் இவ் நிலைமை  தொடருமானால் ஒரு காலத்தில் மலையக தமிழர்கள் வாழ்ந்த நிலைக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் தள்ளப்படுவார்கள் என்பதும் நிஜமாக மாறுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளன.

கிழக்கின் அவலம் தொடரும்...!

ஆர் .சயனொளிபவன் & TEAM