அரசியலில் அனாதையாகும் நிலையில் ஜனாதிபதி மைத்திரி


ஆர்.சயனொளிபவன் & TEAM
  • ஜனாதிபதி மைத்திரியின் முதல் வருடம்…
  • மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் 
  • 2018 ஜனவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி  தேர்தலை தொடந்து 
  • 2018 ஒக்டோபரில் இடம்பெற்ற தோல்வி கண்ட ஆட்சி மாற்ற முயற்சி
  • தோல்விகண்டுவரும் பிரதமராகும் முயற்சி 

8வது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி 16 நவம்பர் 19 என நேற்று அறிவிக்கப்பட்டநிலையில் மேலும் ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் ஒரு சில மாதங்களே நீடிக்கவுள்ள நிலையில் அவருடைய 5 வருடகால ஆட்சி பற்றிய ஒருபார்வை

ஜனாதிபதி மைத்திரி கம்பஹா மாவட்டத்தில் யகோட என்ற கிராமத்தில் 3 செப்டம்பர் 1951யில் பிறந்து தனது சிறுவயதிலேயே  பெற்றோருடன் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள மின்னேரியா பகுதியிற்கு விவசாயத்தை வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் நோக்குடன் குடியேற்றப்பட்டார் . இவர் பொலன்னறுவையிலயே தனது ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியை பயின்ற பின்னர் குண்டகசாலை விவசாய கல்லூரி வரை சென்று டிப்ளோமா பட்டம் பெற்றார். கிராமசேவையாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அரசியலில் 1988 இல் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், கட்சி செயலாளர் என வளர்த்து நாட்டின் அதி உயர் பதிவியான ஜனாதிபதி பதவியை 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் அடைந்தார்..


எமது நாட்டை பொறுத்தளவில் பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட சிங்கள உயர் வர்க்கத்தினரே நாட்டின் தலைமை பதவிக்கு தெரிவு செய்யப்படுகின்ற இவ் வேளையில் குறிப்பாக பொலநறுவை போன்ற பகுதிகளில் இருந்து ஒருவர் சாதாரண அமைச்சராக வருவதே மிகவும் கடினமாக உள்ள இக் காலப்பகுதியில் ஒரு விவசாயின் மகன் மற்றும் ஒரு சாதாரண கிராமசேவையாளர் பொலநறுவை பகுதியில் இருந்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்து ஜனாதிபதியாக வருவதென்பது கற்பனையே பண்ணமுடியாத விடயமாகும் . நிலைமை இவ்வாறு இருக்க. சிங்கள மொழியையே மட்டுமே சரளமாக எழுத பேசக்கூடிய ஒருவர் குறிப்பாக பொலநறுவை பகுதியில் இருந்து வந்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவின் காலப்பகுதியில் இருந்து மஹிந்த வரை சுதந்திர கட்சியின் செயலராகவும் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக வருவது என்பதும் அவருடைய அரசியல் அதி திறமையையும் மற்றும் அவரது அரசியல் சாணக்கியத்தையும் தெளிவாக எடுத்து காட்டுகின்றது.


ஜனாதிபதி மைத்திரியின் முதல் வருடம்…


ஜனாதிபதி மைத்திரியை பொறுத்த அளவில் அமரத்துவம் அடைந்த சோபித தேரர் குழுவினரால் ஒரு முறை ஜனாதிபதியாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் ஜனாதிபதியாகவும் மேலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு கையளிக்கும் ஜனாதிபதியாகவும் களமிறக்கப்பட்டார்.

இவருடைய முதல் ஒரு வருட காலத்தில் 19ஆம் சட்டமூலத்தை ⅔ பெருன்பான்மையுடன் அமூல்படுத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள சில அதிகாரங்களான ,
  • ஒருவர் ஜனாதிபதியாக இருமுறைகள் தான் பதவி வகிக்கலாம்
  • ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களுடன் நிறைவு பெறுதல் ,
  • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதிற்கு மேற்பட்ட வயதெல்லையை உடையவராக இருக்கவேண்டும் ,
  • இலங்கை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் ,
  • பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் குறைந்த பட்சம் 4½ வருடங்கள் நிறைவடையும் வரை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்கமுடியாது
என்ற சில முக்கிய அதிகாரம்களை அமூல் படுத்தும் வகையிலும் அதோடு இச் சட்டமூலமானது மேலும் பல சுயாதீனமாக இயங்கக்கூடிய முக்கிய ஆணைக்குழுக்களான
  • நீதி ஆணைக்குழு,
  • தேர்தல் அணைக்குழு
  • போலீஸ் ஆணைக்குழு
போன்ற ஆணைக்குழுக்களின் உருவாக்கத்திற்கும் வழிகோலியது.

தற்போது ஜனாதிபதி மைத்திரியின் 5 வருட ஆட்சி காலத்தை திரும்பிப்பார்க்கும் போது அந்த ஐந்து வருடகாலப்பகுதியில் முதல் ஒரு வருடகாலப்பகுதியிலேயே ஆக்கபூர்வமாக 19ஆம் சட்டமூலம் உருவாக்கப்பட்டு நீதி துறையும் ஜனநாயகமும் உறுதியான நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுவாகவே நாட்டில் உள்ள சகல இன மக்களும் பாதுகாப்பு கெடுபிடிகள் அற்ற நிலையிலும் பீதி இன்றி சுதந்திரமாகவும் வாழக்கூடிய நிலை உயிர்த்த ஞாயிறு 2019 அன்று மட்டும் தொடர்ந்தது . இதனைவிட நாட்டில் புரை ஓடியுள்ள உள்ள நீண்டகால இனப்பிரச்சினைக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் பொருளதாதர கொள்கைகளையோ அல்லது நாட்டில் அரச அளவில் மேற்கொள்ளப்படுவதாக கருதப்படும் ஊழல்ஒழிப்பு சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையோ மேற்கொள்ளப்படாத வகையில் இவரது ஆட்சி முடிவிற்கு வருகின்றது.


மீண்டும் ஜனாதிபதியாகும் என்னப்பாட்டில்



ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் முதல் இரு வருடங்களை தொடர்ந்து பிரதமர் ரணிலிற்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையேயான வேறுபாடுகள் அதிகரிக்க தொடங்கியது குறிப்பாக பிரதமர் ரணிலினால் கொழும்பு மேல்வர்க்க தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல முக்கிய பதவிகளை தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்டதும் , ஜனாதிபதி மைத்திரியை மதிக்காத தன்மை போன்ற பல காரணம்களினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமான வேறுபாடு காலம் செல்ல செல்ல அதிகரித்ததை உணரக்கூடியதாகவும் இருந்தது இவற்றுள் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயமாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரும் பிரதமர் ரணிலின் நெருங்கிய நண்பருமான அர்ஜுன்  மகேந்திரனை ஆளுநராக நியமித்ததும் அதனை தொடர்ந்து மத்திய வங்கியின் கடன் பிணை முறிப்பு மோசடியில் அர்ஜுன்  மகேந்திரனின் பங்கும் நாட்டின் இரு தலைவர்களுக்கும் இடையேயான உறவு முறையையில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது அதேவேளை ஜனாதிபதி மைத்திரி தான் எவ்வாறாயினும் இரண்டாம் தவனையும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதிலும் மறைமுகமான முறையில் விடா பிரயத்தனத்திலும் இறங்கினார்.

2018 ஜனவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து

இவ்வாறு நிலைமை முறுகல் நிலைமையை அடைந்த கால கட்டத்தில் 2018 ஜனவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருக்குமான உறவு முறையில் மேலும் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இவ் வேளையில் அரசியல் எதிரிகளாக இருந்த ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இடையிலான உறவுமுறை தாமரை மொட்டினுடாக தளிர்க்கவும் ஆரம்பித்தது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் பொதுஜனபெரமுனைய (SLPP) தாமரை மொட்டு கட்சி முதல் முறையாக நாடளாவிய ரீதியில் களமிறங்கி மற்றைய தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளை பெற்ற அதேவேளை - அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 40.47% பெற்று, ஜனாதிபதி மைத்திரியின் பொதுஜன ஐக்கிய முன்னணி (SLFP) படுதோல்வியும் அடைந்தது ( அளிக்கப்பட மொத்த வாக்குகளில் 12.10% தையே பெற முடிந்தது ) இத் தேர்தலில் கட்சிகள் பெற்ற அடைவு மட்டம்



குறிப்பாக 2018 உள்ளூராட்சி தேர்தலின் பின் ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தளவில் மக்கள் செல்வாக்கற்ற பிரதமர் ரணிலோடு கூட்டு வைப்பதில் எந்தவொரு பயனுமில்லை என்பதும் மேலும் 2018 ஜனவரி தேர்தலில் புதிய அரசியல் கட்சியின் ஊடாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 40% இற்கும் அதிகமாகமான வாக்குகளை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவோடு கூட்டு சேர்ந்தால் தான் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக்குவதற்குரிய சந்தர்ப்பம்  அதிகம் இருப்பதையும் நன்கு உணர்ந்த ஜனாதிபதி மைத்திரி தமது உறவு முறையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் வலு பெறவும் செய்தார். இதே காலப்பகுதியில் பிரதமர் ரணிலுடன் அனைத்து விடயங்களிலும் முரண்படவும் தொடங்கினார் . மேலும் இவ் விரிசல் 2018 ஒக்டோபரில் உச்ச நிலையையும் அடைந்தது.


2018 ஒக்டோபரில் இடம்பெற்ற தோல்வி கண்ட ஆட்சி மாற்ற முயற்சி



இதன் தொடர்ச்சியே ஜனாதிபதி மைத்திரியால் 26 அக்டோபர் 18இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற முயற்சியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பிரதமராக தொடர்வதற்கும் மேலும் ஜனாதிபதி மைத்திரி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாகுவதற்குமான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாக ஊகித்தே இவர்கள் இருவரும் இவ் வெற்றியளிக்காத முயற்சியில் இறங்கியதாக கருதப்படுகின்றது.


19ஆம் சட்ட மூலம் அமுலாக்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பொறுத்த அளவில் அவர் வகிக்கக்கூடிய அதி கூடிய பதவியாக பிரதமர் பதவியே இருந்ததாலும் மேலும் இதே சட்ட மூலம் அவரது புதல்வர் நாமலையும் வருகின்ற நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க முடியாத நிலைமையை உருவாகியுள்ளதையும் உணர்ந்தது மட்டுமல்லாது மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பொறுத்த அளவில் அவருடைய முதலாவதும் இறுதியானதுமான ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாக தனது மகன் நாமல் தான் இருந்ததனாலும் , மேலும் ஒரு புது நபரை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பதன் மூலம் தனது மகனின் எதிர்கால அரசியலை பாதிக்கலாம் என்ற எண்ணப்பாட்டினாலும் ஜனாதிபதியாக மைத்திரி மேலும் ஒரு முறை பதவி வகிப்பதே அன்றய நிலைமையில் மிகவும் பொருத்தமானதுமான முடிவாகவும் இருந்தது. இக் காரணம்களால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஜனாதிபதி மைத்திரியும் , மஹிந்த மைத்திரி கூட்டு முயற்சியில் இறங்கினர்.


ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தளவில் அவருடைய அரசியல் சாணக்கியத்தால் அவரிற்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு இது எனவும் இம் முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் தான் இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனவும் கருதினார். இக் காரணங்களினால்  ஆட்சி மாற்ற முயற்சி வெற்றியளிப்பதற்காக இரு தரப்பினரும் கடும் பிரயத்தனத்திலும் இறங்கினர். அந்த வகையில் மாற்று கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் இழுப்பதற்காக பல கோடி ரூபா பணம் மற்றும் அமைச்சு அந்தஸ்து என முன்னர் ஒரு போதும் பார்க்காத அளவிற்கு பேரமும் பேசப்பட்டது.


இறுதியில் நீதி துறையின் நீதியான தீர்ப்பும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த மாற்று கட்சிகளில் உள்ள அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்திற்கு  முற்றிலும் முரணான இம் முயற்சி வெற்றியடைய கூடாதென்பதில் இறுதிவரை உறுதி பூண்டதினாலும் இம் முயற்சி படு தோல்வியையும் தழுவியது.



இம் முயற்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்தும் அவ் வேளையில் ஜனாதிபதி மைத்திரி அமைச்சர் சஜித்தை பிரதமராக்கும் மேலும் ஒரு முயற்சியிலும்  இறங்கினார் அம் முயற்சியிலும் ஜனாதிபதி மைத்திரிக்கு வெற்றியளிக்க வில்லை.

தோல்விகண்டுவரும் பிரதமராகும் முயற்சி

மேலும் கடந்த மாதமும் பிரதமர் ரணிலை பழிவாங்கும் நோக்குடன் அமைச்சர் சஜித்தை பிரதமராக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரி மீண்டும் ஒரு முறை களமிறங்கினார் ஆனால் வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளேன் என கூறிவருகின்ற அமைச்சர் சஜித் அம்முயற்சிக்கு இடமளிக்கவே இல்லை என்றும் கூறப்படுகின்றது. 


இவை அனைத்தும் தோல்வியடைந்ததை தொடர்ந்து புதிய முயற்சியாக அடுத்து வரவுள்ள அரசாங்கத்தில் பிரதமராகும் முயற்சியிலும் ஜனாதிபதி மைத்திரி இறங்கியுள்ளார் என்றும் கருதப்படுகின்றது . ஆனால் இம் முயற்சியு இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளார் என்றும் அவதானிகள் கருதுகின்றனர் . மேலும் அந்தவகையில் கோத்தபாய ராஜபக்சவை பொறுத்தவகையில் அவர் ஜனாதிபதியானால் அவரது சகோதரர் மகிந்தவே பிரதமராகவுள்ளதால் ஜனாதிபதி மைத்திரியை பொறுத்த அளவில் அவருக்கு கோத்தபாயவின் SLPPயிலும் இடமில்லை என்றும் அதேபோல் அமைச்சர் சஜித்தின் முகாமிலும் அமைச்சர் சஜித் ஜனாதிபதியானால் அவரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்த்த ஒருவரையே தமது அரசாங்கத்தில் பிரதமராக்குவார் என்றும் தெளிவாக கூறியுள்ளார் மேலும் ஜனாதிபதி மைத்திரி இரு பிரதான வேட்ப்பாளர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் வருகின்ற ஆட்சியில் அவருக்கு அதிகூடிய பட்ச பதவியாக சபாநாயகரவோ அல்லது ஒரு அமைச்சராகவோ வரக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளன என்றும் அவதானிகள் கருத்து கூறுகின்றனர் .

மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வந்ததில் இருந்து ஒரு சிறிய காலப்பகுதிக்கு பின்பு தான் தொடர்ந்தும் இந்த அதிஉயர் பதவியில் எவ்வாறு இருப்பது என்பதினிலேயே அவர் தனது முழுக்கவனத்தையும் செலுத்த தொடங்கினார் என்றும் மேலும் மிகவும் சிறந்த அரசியல் சாணக்கியம் உடைய இவர் தன்னுடைய  முழு சுயநல காரணத்திற்காக  தனது  பதவியை   நாட்டிற்கு நன்மை பயப்பிக்கும் விடயங்களுக்கு பிரயோகிக்கவில்லை என்றும் மேலும் இவருடைய இப் போக்கால் நாடு பெரும் பின்னடைவுகளை சந்தித்தது  மட்டுமல்லாது பொது மக்கள்   மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் மத்தியிலும் தனது முழு சுய கௌரவத்தையும் நம்பிக்கையையும் இழந்தும் அத்தோடு தாமும் மற்றும் தாம் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியையும் அரசியல் ரீதியாக மிகவும் கீழ் நிலைக்கும் தள்ளியும் உள்ளார். மேலும் இவருடைய இத் தன்மையால் தற்போது இவர் சகல தரப்பினராலும் கைவிடப்பட்ட ஒரு அரசியல் வாதி என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது மட்டுமல்லாது இறுதியாக இவர் அங்கம் வகிக்கும் சுதந்திரகட்சியின் தலைமை பதவியும் இவருடைய பதவிக்காலம் வருகின்ற 16 நவம்பர் 2019 முடிவிற்கு வரும் பட்சத்தில் அவரை விட்டு விலகிச்செல்வதற்குரிய சந்தர்பங்களே அதிகமாக காணப்படுகின்றது. மேலும் கூறப்போனால் தற்போது ஜனாதிபதி மைத்திரி ஒரு அரசியல் அனாதையாகவே மக்கள் மத்தியில் தென்படுகின்றார்.

ஆர்.சயனொளிபவன் & TEAM