குழந்தை மரணம் தொடர்பில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் அறிக்கை


கடந்த புதன்கிழமை, ஒக்டோபர் 2, 2019 அன்று, எமது வைத்தியசாலையில் இடம்பெற்ற சாப்பேறு (Still Birth) தொடர்பில் சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான விதத்தில், மட்டு போதனா வைத்தியசாலைக்கும் அதன் ஊழியர்களுக்கும் அபகீர்த்தியையும், வைத்தியசாலை நிருவாகத்திக்கு மிகுந்த அசௌகரியத்தையும், சாதாரண பாமரமக்களுக்கு வைத்தியசேவையை பெறுவதில் அபரிமிதமான அச்ச உணர்வையும் பீதியையும் ஏற்படுத்தும் நோக்குடன், சிலரால் திட்டமிடப்பட்ட விதத்தில் பொய் பிரசாரங்கள் முன்னெடுத்து செல்லப்படுவது குறித்து மிகவும் வேதனையடைகின்றோம். எனவே, இது தொடர்பில் உண்மையான தகவல்களை பொதுமக்களுக்களுக்கு வழங்குவதற்கும், அவர்கள் தமது சேவைகளை தடையில்லாது பெற்றுக்கொள்ளும் சூழலை தொடர்ந்து பேணுவதற்கும் தார்மீக ரீதியில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மட்டக்களப்பு திராய்மடுவில் வசிக்கும் கர்ப்பிணித்தாயொருவர் தனது முதலாவது பிரசவத்துக்காக செப்டெம்பர் 28 ஆம் திகதி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, சுகப்பிரசவத்துக்கான ஏதுநிலைகள் காணப்பட்டதால், ஒக்டோபர் 2 ஆம் திகதி அதிகாலை மட்டு போதனா வைத்தியசாலையின் பிரசவ அறைக்கு சுகப்பிரசவத்தூண்டலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ அறையில் பொறுப்பு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமாதுக்கள் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுகப்பிரசவத்துக்கு உட்பட்டிருந்தார். இதன் போது தாயினதும் சிசுவினதும் ஆரோக்கியமான நிலைமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டதுடன் அறுவைச்சிகிச்சை அல்லது கருவிகள் பயன்படுத்தி பிரசவிக்க வேண்டிய எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படவில்லை. இந்நிலையில் தூரதிஷ்டவசமாக, முற்றுமுழுதான சுகப்பிரசவத்தில் பிரசவித்த அந்த சிசு இறந்து பிறந்தமை (சாப்பேறு) கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகப்பேற்று வைத்திய நிபுணர் தலைமையிலான குழு சிசுவையும் தாயையும் பார்வையிட்டு தாய் தந்தை இருவருக்கும் பிரசவம் தொடர்பில் விளக்கத்தை தெரிவித்திருந்ததுடன் சாப்பேறுக்கான காரணம் தொடர்பில் சிசுவின் உடற்கூற்றியல் பரிசோதனை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையினுள் அடாவடியாக உள்நுழைந்த கும்பலொன்று வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தி வைத்தியசாலை சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படும் விதமாக நடந்து கொண்டதுடன், மகப்பேற்று விடுதியிலும் பிரசவ அறையிலும் இருந்த ஏனைய தாய்மாருக்கும் அவர்களது பார்வையாளர்களுக்கும் அசௌகரியத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இந்த அராஜக நடவடிக்கையானது வைத்தியசாலையின் நிருவாக பணிகளுக்கும் சேவை வழங்கலுக்கும் பாரிய இடையூறாக இருப்பது மட்டுமன்றி நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் நீதிக்கும் விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும். இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சாப்பேறு தொடர்பில் பெற்றோருக்கு சந்தேகம் நிலவுவதால் திணைக்கள ரீதியான உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பெற்றாருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், சாப்பேறு தொடர்பில் மேலதிக சில தரவுகளை பொதுமக்களுக்கு வழங்குவது அவர்களின் அச்ச உணர்வை போக்க உதவும் என நம்புகிறோம்.

சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளுக்கமைய, இந்த நாட்டில் வருடமொன்றுக்கு சராசரியாக 1700 சாப்பேறுகள் இடம்பெறுவதுடன் 35 வீதத்துக்கும் அதிகமானவற்றுக்கு இன்னும் காரணம் கண்டறியப்படவில்லை. அதிகமான இறப்புகளுக்கு பிறப்பு குறைபாடுகளே காரணமாக அமைந்துள்ளன. மேலும், 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் தேசிய சாப்பேறு வீதம் 6.1 (1000 பிறப்புகளுக்கு) ஆக இருக்கும் நிலையில் மாகாணத்தின் போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 2018 ஆம் ஆண்டுக்கான சாப்பேறு வீதம் 5.98 (1000 பிறப்புகளுக்கு) ஆகும்.

எனவே, சிலரால் உண்மைக்குப் புறம்பாக உள்நோக்குடன் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை வினயமாக வேண்டிக்கொள்வதுடன் மட்டு போதனா வைத்தியசாலை தொடர்ந்தும் தரமான மருத்துவ சேவையை மனித நேயத்துடன் வழங்கிவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.


நிர்வாகம்
போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு