முஸ்லீம் அமைச்சர்கள் சிலர் பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே , ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்



(பாறுக் ஷிஹான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர்கள் சிலர் பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே, ரணிலின் அந்த நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் என தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் கலாநிதி.அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஊடக வியலாளர்  சந்திப்பொன்று வியாழக்கிழமை(17) நேற்று இரவு அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற போதே மேற்கூறியவாறு  குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்கள் மீது கலவரங்களை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த அரசாங்கத்தை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமா? என முஸ்லிம் மக்கள் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இன்று நாட்டின் பாதுகாப்பு இல்லாத நிலையில் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல்கள் நிலைகொண்டுள்ளன. இந்த வேளையில் நாம் இன மத பேதம் மறந்து இலங்கையர்கள் என்ற சிந்தனையில் சிந்திக்க வேண்டும்.


இவ்வாறு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒருவரான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ச உள்ளார். எனவே இவரை ஆதரித்து நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் . இத் தாக்குதலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலிஇ ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் தமது பதவிகளை இராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு இருந்த வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலக வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் முஸ்லீம் அமைச்சர்களும் தத்தமது அமைச்சு பதவிகளை துறந்தனர். பின்னர் சிறிது காலம் சென்ற பின்னர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். இதனால் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? அல்லது தீர்வு தான் என்ன? இந்த முஸ்லிம் அமைச்சர்கள் நாம் எங்கிருக்கின்றோம் என்பதை விட எவ்வாறு இருக்கின்றோம் என்பதை சிந்திக்கும் அரசியல் தரகர்களாகவே இருக்கின்றனர்.

எனவே தான் இவர்களது பதவி துறந்த இச்செயற்பாடு ஒரு நாடகமாகும்.இந்த நாடகத்தின் சிறந்த கதை ஆசிரியராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். சிறந்த நடிகனாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டுள்ளார். அதன் வில்லனாக அமைச்சர் றிசாட் உள்ளார்.இதனால் இவருக்கு கிடைத்த பரிசு தான் மேலதிக அமைச்சு பதவிகள் என்று தனது கருத்தில் சுட்டிக்காட்டினார்.