பகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்




றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சக்கட்டத்தில் தொடர்வதால் பல மாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

மாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி மற்றும் எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது.

அங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக வார்த்தை துஷ்பிரயோகம் மற்றும் அவர்களின் உடல் அவயங்களை எடுத்த காணொளிகள் என்பன வைரலாக பரவுகின்றதாகவும் தெரிய வருகின்றது .


இந்த பகிடிவதை இம்சைகள், இதுவரை பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் 14 பேரின் உயிரை நேரடியாக பறித்திருக்கிறது.


இப்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையானது பாலியல் ரீதியிலான வன்முறை இம்சை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறுகிறார்.


ஒரு காலத்தில் பகிடிவதை என்பது பகிடிவதையை செய்பவருக்கும் செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாகவே இருந்தது. ஆனால் இப்போது அது நினைவில் மட்டுமே உள்ள நிகழ்வாகும்.


இப்போதைய பகிடிவதையானது ஒரு சித்திரவதையாகும். இதன்போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை, மன உளைச்சல் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பே வேண்டாம் என பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு.


பகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இதனை ஒரு பாரதூரமான விடயம் என்று கருதுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.


2017/2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1989 மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 6 முதல் 7 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் பல்கலைக் கழகங்களுக்கு செல்லாமலே இருந்துள்ளனர்.


எனினும் இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பகிடிவதையின் பயம் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.


பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்கு கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.


அண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் “எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். அந்த அளவுக்கு அவர் அச்சமடைந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி அவரது உறுப்புகளை சிதைக்கும் அளவுக்கு மோசமான பகிடிவதை நடந்திருக்கிறது. இதனால் எனது மகன் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன்” என அந்த தாய் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருசில விஷமத்தனம் மிகுந்த மாணவர்களின் இவ்வித செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமைக்கே களங்கம் ஏற்படுகிறது.


தொடர்தும் பல்கலைகழகங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமானால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் என கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.