அடைமழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம்


(வி .சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த அடைமழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் உகன பிரதேச செயலகப்பிரிவுகளில் தமது குடியிருப்புக்களில் இருந்து வெளியேறிய பொது மக்களே இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று 7ஃ4 பிரிவுகள் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்கு வாழ்ந்து வந்த மக்களின் குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்துள்ளதனால் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவினை வழங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் கடந்த ஒரு வாரகாலமாக அம்பாரை மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களுக்குகுட்பட்ட பிரதேசங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரையோரப்பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு மற்றும் உகன பிரதேசங்களில் இடப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான நிலை உருவானபோதும் அங்குள்ள பல்வேறுபட்ட அரச திணைக்களங்களின் ஒன்றிணைந்த முயற்சி மற்றும்; மக்களது பங்களிப்புடன் இடப்பெயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.
இதேநேரம் வெள்ளம் வழிந்தோடுவதற்கான சகல ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதுடன் கடலுடன் வெள்ள நீரை வெளியேற்றும் ஆற்று முகங்களும் வெட்டப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான சமைத்த உணவும் பிரதேச செயகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாளைய தினம் க.பொ.த.சாதாரண பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நாவிதன்வெளி மற்றும் கல்முனை பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி பாலத்தின் மேலாக இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுவதாகவும் இப்பகுதியின் ஊடாக பயணிக்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்மை கருதி படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

அனர்த்த தயார்படுத்தல் மாதமாக இம்மாதம் அம்பாரை மாவட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரச திணைக்களங்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும் அம்பாரை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்கான நிரந்தர வழிமுறைகள் இதுவரை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படாமையே இந்நிலைக்கு காரணம் என்பதே இதன் மூலம் உணர முடிகின்றது.