எந்த களை நாசினிக்கும் சொல்லுக்கேட்கவில்லை'-முறையான களைநாசினிகளை மாத்திரம் சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

(வி.சுகிர்தகுமார்)
முறையான களைநாசினிகளை பெற்றுக்கொடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொடுப்பதுடன்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்குமாறு அம்பாரை மாவட்டத்தின் விவசாய அமைப்புக்களும் விவசாயிகளும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாரை மாவட்டத்தின் பனங்காடு, கண்டம், தோணிக்கல் உள்ளிட்ட பல பெரும்போக விவசாய கண்டங்களில் ஏற்பட்டுள்ள அறக்கொட்டித்தாக்கத்தினை அடுத்தே விவசாயிகள் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் அறக்கொட்டிப்பூச்சின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளதுடன் காலநிலை மாற்றம் காரணமாகவே இவ்வாறு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதே நேரம் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து காப்பாற்றப்பட்ட வயல் நிலங்கள் அறக்கொட்டி உள்ளிட்ட சில நோய்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.
'எந்தக் களை நாசினிக்கும் சொல்லுக்கேட்கவில்லை' இவ்வாறு விதை நெல் உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இதனை விவசாய திணைக்களம் பார்வையிட்டு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

'விவசாய திணைக்களத்தால் சிபாரிசு செய்யப்பட்ட பல களைநாசினி கூட பயன்தரவில்லை' என இன்னுமொரு விவசாயி குற்றம் சாட்டினார்.
'சந்தையில் முறையான நாசினிகளை மாத்திரம் விற்பனை செய்ய விவசாயத்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' இது இன்னுமொரு விவசாயியின் வேண்டுகோள்.

ஆகவே அரசாங்கமும் விவசாய திணைக்களமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் முறையான நாசினிகளை மாத்திரம் சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.