தியாகப்பிரம்மம் சற்குரு தியாகராஜர் ஆராதனை!



(T.Mukunthan)
சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள். இவருடைய 173-வது ஆராதனை விழா பகுளபஞ்சமி தினமான 15.01.2020 புதன்கிழமை அவரது சமாதி அமைந்துள்ள திருவையாறில் நடைபெறுகிறது!


சுவாமிகளின் அதிஷ்ட்டானத்தில் இசைக்கலைஞர்கள் இணைந்து கர்நாடக இசை உலகின் கடவுளாக விளங்கும் தியாகராஜ சுவாமிகளுக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகளை இசைத்து, ஆராதனை செய்வதை இசைக்கலைஞர்கள் தங்கள் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடப் பாடக் குரலின் வளமும், சாகித்தியம் பெருகும் என்பது ஐதீகம் . ஈழத்திலிருந்தும் பல கலைஞர்கள் சென்று இந்நிகழ்வில் பங்குகொள்வது வழமை!

கடந்த 4 வருடங்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட அடியேனுக்கு இம்முறை பங்குபற்ற முடியாவிட்டாலும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் கண்ட அனுபவங்களை இம்முறை இங்கிருந்து ஆத்மார்த்தமாக அனுபவிக்கலாம் என்றிருக்கின்றேன்.

இங்கும் காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் இசைஆராதனையை வழமை போன்று நிகழ்த்தி வந்தாலும் இம்முறை பொங்கல் தினத்தன்று பஞ்சமி வருவதால் மாலைநேரம் இந்நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. 

குறிப்பாக சபரிமலை சென்று மகரஜோதி தரிசனத்தைக் கண்டபிறகு அல்லது அதற்கு முன் நடக்கும் இந்நிகழ்வு வழமைக்கு மாறாக மகரஜோதியிலன்று நடைபெறுவதும்குறிப்பிடத்தக்கது. பஞ்ச ரத்ன கீரத்தனை இசைக்கப்படும் இந்த ஒரு மணிநேரம் நாம் எம்மை மறந்து அதி உன்னத பேரானந்தத்தில் திழைத்திருப்பதைஅனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும்!