ஈஸ்வரா சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்திற்கான பகல் வேளை பராமரிப்பு நிலைய கட்டட திறப்பு!

(வி.சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு கிராமத்தில் சமூக சேவை திணைக்களத்தின் 20 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட ஈஸ்வரா சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்திற்கான பகல் வேளை பராமரிப்பு நிலைய கட்டட திறப்பு விழாவும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நேற்று முன் தினம் (12) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அம்பாரை மாவட்ட முதியோர் ஒருமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மகேஸ்வரன், அலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா, சமூக சேவை உத்தியோகத்தர் கே.கமலராஜா, பிரதேச மட்ட சிரேஸ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் த.கயிலாயபிள்ளை, ஈஸ்வரா சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் எஸ்.மகாலிங்கம் உள்ளிட்ட பிரதேச செயலக சமூகசேவைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிரேஸ்ட பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டனர். தொடர்ந்து அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து கட்டடத்தினை திறந்து வைத்தனர்.
பின்னர் அறம்வழி அறக்கட்டளை அமைப்பினூடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளையும் அதிதிகள் நாட்டி வைத்ததன் பின்னர் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அதிதிகள் குறித்த கட்டடத்தினை சிரேஸ்ட பிரஜைகள் முறையாக பயன்படுத்தி முழுமையான பயனை அடையவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில்  அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பிரதேச செயலாளர் கே.லவநாதன் உள்ளிட்ட மூவரும் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.