சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களை இராணுவ முகாமிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை !


சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 மாணவர்களும் 16ஆம் திகதி அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த 33 மாணவர்களும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கெரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு தியத்தலாவை முகாமில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மாணவர்களின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர இவ்வாறு கூறினார். அத்துடன் 33 மாணவர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அங்கொடையில் உள்ள தொற்று நோய் வைத்தியசாலை, கண்டியில் உள்ள தேசிய வைத்தியசாலை, கட்பிட்டி, றாகம, குருணாகல், யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை மற்றும் நீர்கொழும்பில் உள்ள பொது வைத்தியசாலைகளில் 15 இலங்கையர்கள் இன்னும் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.