மட்டு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு !

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களது காலடிக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.03.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள பதினாறு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாய விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கொரானா அத்தியாவசிய பொருட்கள் வினியோக படையணி உறுப்பினர்களும் கூட்டுறவு சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினாறு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கூடாக அதன் கீழ் இயங்கும் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாகவும் நடமாடும் விற்பனை வாகனத்தின் ஊடாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் இச் சேவையை வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

சீனி, பருப்பு, கடலை, வெங்காயம், அரிசி, கோதுமை மா, பால் மா, உப்பு, டின் மீன் போன்ற பொருட்கள் போதியளவு உள்ளதாகவும் இவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்க எங்களது திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் மேலும் தெரிவித்தார்.